நீதிபதி இளஞ்செழியன் ஏமாற்றப்பட்டாரா?

பருத்தித்துறை நீதிமன்றத்திற்குரிய இரண்டு ஏக்கர் காணியை, ஹாட்லிக் கல்லூரிக்கு வழங்க அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தின் ஒரு பகுதி காணியை 1996ஆம் ஆண்டு இராணுவம் ஆக்கிரமித்து முகாம் அமைத்தது. உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து, பின்னர் அது நீக்கப்பட்டு, தற்போது அந்த காணிக்குள் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் கடமையிலிருந்த போது, யாழ் இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சியிடம் அந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். பருத்தித்துறை நீதிமன்ற வளாகம் தற்போது சிறிய இடப்பரப்பிற்குள்ளேயே இயங்கி வருகிறது. வாகன தரிப்பிட வசதியும் கிடையாது. வீதியிலேயே வாகனங்கள் தரித்து விடப்படுகின்றன. இதையும் மா.இளஞ்செழியன் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, அந்த முகாமை அகற்றி, நீதிமன்றத்திற்குரிய இரண்டு ஏக்கர் நிலத்தையும் விரைவில் விடுவிப்பதாக இராணுவத்தளபதி உறுதியளித்திருந்தார்.

இந்த நிலைமையில், கொழும்பு நீதியமைச்சிலிருந்து யாழ் நீதிமன்ற பதிவாளருக்கும், பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற பதிவாளருக்கும் விசேட தகவலொன்று இன்று காலையில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது தொடர்பான தகவல்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது. நீதிமன்றத்திற்குரிய காணியை நீதிமன்றத்திற்கு வழங்காமல், அருகிலுள்ள ஹாட்லிக்கல்லூரிக்கு வழங்கப்படவுள்ளதாக அந்த விசேட தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் கூடி இந்த விடயத்தை ஆராய்ந்தனர். உடனடியாக கொழும்பிற்கு சென்று நீதியமைச்சின் அதிகாரிகளுடன் பேசி, நீதிமன்றத்திற்குரிய காணியை நீதிமன்றத்திற்கே பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காணி கைமாற்றலின் பின்னணியில் சில அரசியல் தரப்புக்கள் இருப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.