வங்கதேச அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது எப்படி?

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தகுதிபெற்று விட்டது. இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியானா அந்த ஆட்டம் நேற்று அபுதாபியில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணி 12 ரன்கள் எடுப்பதற்குள் முதல் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் முகமது மிதுன் ஜோடி சேர்ந்தார்.

அரைசதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் வங்காளதேச அணி 48.5 ஓவரில் 239 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது.

பாகிஸ்தான் அணி சார்பில் ஜூனைத் கான் 4 விக்கெட்டுகளும், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாய் இருந்தது.

அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.அந்த அணியில் இமாம் உல் ஹக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 81 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து ஆசிப் அலி 31 ரன்களும், சோயப் மாலிக் 30 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

இதனால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி வெற்றி பெற்று இந்த தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது. வங்காளதேசம் அணி சார்பில் முஸ்தபிசூர் ரகுமான் 4 விக்கெட்டுகளும், மெஹித் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.