நண்டு முருங்கைக்காய் குருமா…

தேவையான பொருட்கள்:

நண்டு – 1/2 கிலோ
அரைத்த தேங்காய் ‍- ஒரு பிடியளவு
இஞ்சி பூண்டு – 3 ஸ்பூன்
மிளகாய்த் தூள் ‍- 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகு ஜீரகத்தூள் – 3 ஸ்பூன்
கறி மசாலாத்தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் ‍ – 6 ஸ்பூன்
உப்பு – தேவையானது

முருங்கைக்காய் பெரியது – 1
வெங்காயம் பெரியது – 1
தக்காளி – 1
ப.மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:

சுத்தம் செய்த நண்டுகளுடன் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டும் சிறிது உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி, அத்துடன் 2 ஸ்பூன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகு ஜீரகத்தூள், கறி மசாலாத்தூள், மல்லித்தூள் அனைத்தையும் சேர்த்து வைத்துக் கொள்ள‌வேண்டும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கீறிய ப. மிளகாயை தாளித்து, கால் பகுதி வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்துப் போட்டு தாளிக்கவும்.

வெங்காயம் முறுக ஆரம்பித்தவுடன் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.

பிறகு மீதியுள்ள 2 ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து, அரிந்த தக்காளியையும் மீதியுள்ள வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும்.

தக்காளி, வெங்காயம் குழைந்து வரும்போது பிரட்டி வைத்துள்ள நண்டு மசாலாவைக் கொட்டி வதக்கி, 3/4 டம்ளர் அளவு தண்ணீர் மற்றும் தேவைக்கு உப்பும் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து 5 நிமிடங்கள் மூடிவைக்கவும்.

பிறகு நறுக்கிய முருங்கைக்காயை நீளவாக்கில் கீறிவிட்டு அத்துடன் சேர்த்து பிரட்டி, 2 நிமிடம் மட்டும் மீண்டும் மூடிபோட்டு வைக்கவும். (அதிக நேரம் வைத்தால் முருங்கைக்காய் பழுத்துவிடும்)

இப்போது முருங்கைக்காய் வெந்துவிட்டதை உறுத்தி செய்துக் கொண்டு அரைத்த தேங்காய் சேர்த்து பிரட்டிவிட்டு, சுமார் 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க‌வும்.

சுவையான, சத்து நிறைந்த‌ நண்டு முருங்கைக்காய் குருமா தயார்! சூடாக(வோ ஆறியோ கூட) பரிமாற சுவையாக இருக்கும்.

டிப்ஸ்: நண்டு சமைக்கும்போது அதன் கால்களை வெயிட்டான கரண்டி போன்ற பொருளால் மேல் தோடு உடையுமளவு தட்டிவிட்டு அல்லது Nut Cutter கொண்டு மெதுவாக உடைத்துவிட்டு சமைத்தால், அதன் உள்ளே மசாலாவின் சுவை நன்கு ஏறும். சாப்பிடும்போதும் சுலபமாக இருக்கும்.