அதிமுகவின் அசத்தல் வியூகம்! ரெண்டும் நமக்கு தான்!

தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளான திருப்பரங்குன்றம், திருவாரூருக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளை கைப்பற்றுவதில் அதிமுக, திமுக, அமமுக இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் அதிமுக சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகும் விதமாக அதிமுகவில் 3 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் அந்த குழுவில் இடம்பிடித்துள்ளார்கள். இக்குழுவில் மேலும் 13 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்தம் 13 மாநகராட்சி வார்டுகள், 32 ஊராட்சிகள் இருக்கின்றன. அவனியாபுரம் பகுதியில் உள்ள 7 மாநகராட்சி வார்டுகளுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பொறுப்பாளராகவும், திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விப்பட்டி உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள 6 மாநகராட்சி வார்டுகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பொறுப்பாளராகவும், திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ள 32 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ராஜன்செல்லப்பா பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு தலா 15 அமைச்சர்கள் தேர்வு செய்யப் பட்டுவிட்டனர். முதல்வர், துணை முதல்வர் தலைமையில் தேர்தல் பணிக்குழு விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.