அனைத்து பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை..

உலகம் முழுவதும் இணையதளங்கள் வாயிலாக குழந்தைகளின் ஆபாசப் படங்கள் வெளிவருவது சடுதியாக அதிகரித்திருப்பதாக சர்வதேச அமைப்பு ஒன்று அதிர்ச்சி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

குறிப்பாக இதுதொடர்பான காணொளிகள் முன்னரைவிட மூன்று மடங்காக அதிகரித்திருப்பதாகInternet Watch Foundation (IWF) எனும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Internet Watch Foundation என்ற அமைப்பானது (IWF) இணையத்தளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

இதன்படி கடந்த ஆண்டு குழந்தைகள் தொடர்பான ஆபாசக் காணொளிகளின் 78 ஆயிரம் இணையத்தள இணைப்புக்கள் (URL) இருந்ததாகவும் அது தற்பொழுது 37 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

அதுதவிர வன்புணர்வு மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அடங்கிய வீடியோக்கள் 33 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

குறித்த அமைப்பின் தலைமை அதிகாரி ஒருவர் இதுகுறித்துக் குறிப்பிடுகையில்,

”எமது அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், குழந்தைகள் மீதான வன்முறைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிலிருந்து சிறுவர்களைக் காப்பது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாக மாறி வருகிறது. இதில் பெற்றோர்கள் முழுப் பங்களிப்பினை ஆற்றவேண்டும்” என்றார்.

IWF அமைப்பானது, இணையதளங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவற்றை நீக்கும் அதிகாரத்தைக் கொண்ட ஒரு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குழந்தைகள் தொடர்பான ஆபாச காணொளிகள் அவர்களாலும் தன்னிச்சையாக எடுக்கப்பட்டு இணையதளங்களிலும் சமூக வலைத்தள உரையாடல்களிலும் பகிரப்படுவதால் பெற்றோர் இதுகுறித்து உடனடியாக கவனமெடுக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.