எத்தனை முறை சுவைக்க வேண்டும் ஓர் உணவுக் கவளத்தை? – மருத்துவ உண்மை!

‘நொறுங்கத் தின்றால் நூறு வயது ’ என்றொரு பழமொழி உண்டு. உணவை நன்றாக மென்று சாப்பிட்டால், நோயின்றி வாழலாம் என்பதுதான் பழமொழி உணர்த்தும் உண்மை. செரிமானம் என்னும் அடித்தளம் பலமாக அமைந்துவிட்டால், நோய்கள் நம்மை நெருங்காது. `வேலைகளை விரைந்து முடித்துவிட்டு, பொறுமையாக உணவைச் சாப்பிடலாம்’ என்றிருந்த காலம் மாறி, `உணவை விரைவாகச் சாப்பிட்டுவிட்டு, மற்ற அலுவல்களுக்கு நிறைய நேரம் ஒதுக்கலாம்’ என்ற சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பற்களோடும் எச்சில் சுரப்புகளோடும் தொடர்புகொள்ளாமலே, உணவுப் பொருள்களை நேரடியாக உணவுக்குழாய்க்குள் (Oesophagus) தள்ள முயல்கிறோம். உணவை நொறுக்குவதற்கு அத்தியாவசியமான டெரிகாய்ட் (Pterygoid), மேஸட்டார் (Masseter), டெம்பொராலிஸ் (Temporalis) போன்ற தசைகளுக்கு வேலைகொடுக்காமல் ஓய்வளிக்கிறோம்.

பற்களோடும் எச்சில் சுரப்புகளோடும் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் உறவாடுவது எவ்வளவு அவசியம் தெரியுமா? குடிக்கும் நீரைக்கூட மென்று பருகுங்கள் என்று சொல்வார்கள். அப்படி இருக்கும்போது, உணவுகளை நன்றாக மென்ற பிறகு உட்செலுத்துவதுதானே சரியாக இருக்கும். பலர் நினைப்பதைப்போல, செரிமானம் வயிற்றில் தொடங்குவதில்லை. வாய்ப் பகுதியிலேயே தொடங்கிவிடுகிறது. பற்கள், தாடைத் தசைகள், நாக்கு, எச்சில் ஆகியவற்றின் உதவியுடன் உணவை நொறுக்குவதுதான் செரிமானத்தின் முதல் படி. இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டால், உணவை நொறுக்குவதற்கான அவசியம் புரிந்துவிடும். உணவுகளை நொறுக்கி, சிறுசிறு அளவாக மாற்றும்போது, உணவுகளிலிருந்து சாரங்களைப் பிரித்தெடுக்க செரிமானக் கருவிகளுக்கு எளிதாக இருக்கும். இல்லையென்றால், வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் உணவை உடைக்க, செரிமானக் கருவிகள் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். நன்றாக மென்று சாப்பிடும்போது, எச்சில் சுரப்பின் அளவு அதிகரிக்கும். நொறுக்கப்பட்ட உணவுடன் எச்சில் கலந்து, பிசுபிசுப்புடன் இரைப்பை நோக்கிப் பயணிக்கவைக்கும். நாம் சாப்பிடும் மாவுப்பொருள்களை உடைக்கும் செயல், எச்சில் சுரப்புகளில் உள்ள `அமைலேஸ்’ (Salivary amylase) நொதியால் வாய்ப்பகுதியிலேயே தொடங்கிவிடுகிறது. எச்சில் சுரப்பில் இருக்கும் `லைஸோசைம்’ (Lysozyme) என்னும் நொதிக்குக் கிருமிகளை அழிக்கும் தன்மையும் இருக்கிறது. கொழுப்புப் பொருள்களின் செரிமானமும் எச்சில் சுரப்புகளால் வாயிலேயே தொடங்கிவைக்கப்படுகிறது. ஆனால், முழுமைபெறுவதற்கு அவை வயிற்றுக்குள் செல்வது அவசியம்.

நாம் உணவுகளை நன்றாக மென்று சாப்பிடும்போது, விரைவில் உணவு உண்ட திருப்தி கிடைக்கும். மென்று சாப்பிடாவிட்டால், திருப்தி இல்லாமல் அதிக அளவில் உணவுகளை எடுத்துக்கொள்ள நேரிடும். உணவை அதிக நேரம் சவைக்கும்போது, உணவுகளில் உள்ள சுவையை முழுமையாக அனுபவிக்க முடியும். வாயில் மென்று சாப்பிடத் தொடங்கும்போதே, வயிற்றுப் பகுதியில் செரிமானத்துக்குத் தேவையான செயல்பாடுகள் எல்லாம் தொடங்கிவிடும். `வாயில் உணவு நுழைந்துவிட்டது… நம்மிடம் வரும் உணவை செரிப்பதற்குத் தயாராவோம்’ என வயிற்றுத் தசைகள், கணையம், கல்லீரல் என உள்ளுறுப்புகள் காத்துக்கிடப்பது இயங்கியல்.ஓர் உணவுக் கவளத்தை எத்தனை முறை சவைக்க வேண்டும் என்றால், அது உணவைப் பொறுத்தது. சில காய் மற்றும் பழ வகைகளை ஐந்து முதல் பத்துமுறை சவைத்தால் போதுமானது. அதுவே, சற்று கடினமான உணவையோ இறைச்சித் துண்டுகளையோ இருபது முதல் முப்பது முறை சவைக்கவேண்டியிருக்கும். உணவு நூல்களும் சுமார் முப்பதுமுறை வரை மென்று சாப்பிட வேண்டும் என்றே கூறுகின்றன.

ஆனால், நாம் எத்தனை முறை மென்று சாப்பிடுகிறோம் என்று யோசித்துப்பாருங்கள். அடுத்த வேளை உணவு சாப்பிடும்போது கவனித்தால், நாம் அவ்வளவாக உணவை சவைப்பதில்லை என்பது தெளிவாகத் தெரியும். ’முப்பது முறை சவைக்கிறேன்’ என்று எண்ணிக்கொண்டே சாப்பிட வேண்டிய அவசியமில்லை. உணவு, வாயில் நன்றாக கூழ்ம நிலைக்கு வந்தவுடன் விழுங்கினால் போதும். விழுங்குவதற்கு முன், சிறு உணவுத் துணுக்குகள் வாய்ப்பகுதியில் சுழன்றுகொண்டிருந்தால், நீங்கள் உணவை தேவையான அளவுக்கு சவைக்கவில்லை என்று அர்த்தம்.

உணவை மென்று சாப்பிடுவதால் பற்களுக்கு பலம் உண்டாகும். மெல்லும்போது சுரக்கும் அதிக அளவிலான எச்சில் சுரப்பு, பற்களில் கிருமிகளின் தாக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். `உணவு சாப்பிடும்நேரத்தில் முழுக் கவனத்தையும் உணவில் மட்டுமே செலுத்த வேண்டும்’ என்று சொல்வதற்கான காரணங்கள் பல. செல்போன் பேசிக்கொண்டும், வேறு செயல்களைச் செய்துகொண்டும் சாப்பிடும்போது, உணவின்மேல் கவனம் இல்லாமல், மென்று சாப்பிடுவதற்கு வாய்ப்பே இல்லாமல்போகும்.

முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும், மென்று சாப்பிடமுடியாத சூழலில், செரிப்பதற்குக் கடினமான உணவுகளைக் கொடுத்து, செரிமானக் கருவிகளுக்கு கூடுதல் சுமை கொடுக்கக் கூடாது. செரிமானத்துக்கு எளிமையான மற்றும் கூழ்ம வகை உணவுகளைக் கொடுப்பது நல்லது. பற்களின் செயல்பாடு தொடங்கியதும், குழந்தைப் பருவம் முதல் மென்று சாப்பிடுவதன் அவசியத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது முக்கியம். சில தாய்ப் பறவைகள், உணவை நன்றாக நொறுக்கித் தங்களது இளம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடுவதும் செரிமானத்தைத் தூண்டும் அறிவியல்தான். சில விலங்குகளின் வயிற்றுக்குள் சென்ற பாதி செரிமானமான உணவுப் பொருள்கள், வாய்ப்பகுதியில் நொறுக்கப்படுவதற்காக மீண்டும் எதுக்களிக்கப்படுவதும் இயற்கை உணர்த்தும் அறிவியலே.

தொடர்ந்து, உணவை மென்று சாப்பிடாமல் விழுங்கிக்கொண்டிருந்தால், வயிற்று உப்புசம், உணவு எதுக்களித்தல், வாய்வுப்பெருக்கம் போன்ற குறிகுணங்கள் தோன்றும். அனைவரது வீட்டிலும் ஒரு கண்காணிப்பு கேமரா இருந்தால், கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காணமுடியும். காலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் புத்தகங்களை பரபரப்பாகத் தேட, குடும்பத் தலைவர் அலுவலகம் செல்லும் அவசரத்தில் வேறு வேலை செய்துகொண்டே காலை உணவை வேகவேகமாக உட்செலுத்த, குடும்பத் தலைவியோ, இட்லித் துண்டுகளைக் குழந்தைகளின் வாயில் திணிக்க, மீதமிருக்கும் இட்லியை வேகமாக விழுங்கிவிட்டு, அவரும் அலுவலகம் செல்லும் அவசர யுகத்தில் உணவை மெதுவாக மென்று சாப்பிட முடியுமா? மென்று சாப்பிடுவதன் அறிவியலைப் புரிந்துகொண்டால்…

உணவை நொறுக்குவதற்கு வாய்ப்பகுதியில் மட்டுமே பற்கள் இருக்கின்றன. வாய்ப்பகுதியைத் தாண்டிவிட்டால், தசைகளின் இயக்கங்கள் மற்றும் ரசாயனங்களின் சூட்சுமங்களின் மூலமே உணவுகளைக் கசக்கிப் பிழிந்து சாரத்தை உறிஞ்ச முடியும். செரிமானத்தை எளிமையாக்க பற்கள், தசைகள், ரசாயனங்கள் போன்றவற்றின் கூட்டுச் செயல்பாடு மிகவும் அவசியம். செரிமானத்தின்போது தசைகளும் ரசாயனங்களும் நாம் சொல்வதைக் கேட்காது. ஆனால், `உணவை நன்றாக நொறுக்கு’ என்று பற்களுக்கு ஆணையிடலாம் அல்லவா… பற்களைப் பயன்படுத்தி நொறுங்கத் தின்போம்!..