மாதுளம் பூ: நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்த உதவுமாம்!

மாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல மாதுளை பூவும் சத்துகளை கொண்டுள்ளதுடன் சளி, இருமல், மூச்சிரைப்பு போன்ற நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது.

நரம்புத்தளர்ச்சி போக்க மாதுளம் பூவை பயன்படுத்தும் முறை
  • தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும்.
  • மாதுளம் பூ உடம்பில் உள்ள நரம்புகள் வலிமை பெற பெரிதும் உதவுகின்றது. மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
  • மாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வர நரம்புகள் அனைத்தும் வலிமை பெறும்.
மாதுளம் பூவின் நன்மைகள்
  • மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
  • உலர்ந்த மாதுளை மொட்டுகளை இடித்து தூள் செய்து கொள்ளவும், இதனை ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் கலந்து பருகினால் இருமல் குணமாகும்.
  • உலர்ந்த மாதுளைப்பூக்களை ஒரு தேக்கரண்டி எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி சரியாகிவிடும்.
  • சீரகத்தோடு உலர்ந்த மாதுளைப்பூவைச் சேர்த்து மண் சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து இடித்து நன்கு தூளாக்கி வஸ்திர காயம் செய்து வைத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் மூலவாயு மாறும் உஷ்ணத்தில் தோன்றக்கூடிய பேதியும் குணமாகும்.
  • பெண்களின் கருப்பை நன்கு வலுவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும்.
  • மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் மாதவிலக்கு நிற்கும் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கை, கால், இடுப்பு மூட்டுகளில் வலி குணமாகும்.