அமெரிக்காவை நெருங்கிய அதிபயங்கர புயல்….. 10 லட்சம் பேர் வெளியேற்றம்

வடக்கு அட்லாண்டிக் கடலில் அதி பயங்கர புயல் உருவாகியுள்ளது, இந்த புயலுக்கு ஃபுளோரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது ஃபுளோரன்ஸ் புயலானது அமெரிக்காவையே அச்சுறுத்தி வருகின்றது.

முதலில் வடக்கு அட்லாண்டிக் கடலை கடக்கும் எனவும் பின்னர் பெர்முடா தீவு மற்றும் பஹாமாஸை வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கடக்க உள்ளது. பின்னர் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை கடக்க உள்ளது.

முதல் வடக்கு கரோலினாவின் வில்மிங்டன் நகரை இந்த ஃபுளோரன்ஸ் புயல் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த புயல் அதிபயங்கரமானது என அந்நாட்டு தேசிய வானியல் மையம் தெரிவித்துள்ளது.

தற்போது 4ஆம் நிலையில் உள்ள இந்த புயல் விரைவில் 5 ஆம் நிலையை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயலால் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரை பகுதி பலத்த சேதத்தை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, மற்றும் விர்ஜினியா பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபுளோரன்ஸ் புயல் காரணமாக மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் கனமழை பெய்து வெள்ள பெருக்கு ஏற்படும் என என்று அமெரிக்க வானியல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு சில இடங்களில் 50 சென்டி மீட்டருக்கு மேல் மழை கொட்டும் என்றும் கடல் பகுதியில் 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தொடர்ந்து டிவிட்டரில் வலியுறுத்தி வருகிறார்.