ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துபவர்களில் இதய நோய்கள் மற்றும் பக்கவாத நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வொன்றில் ஆலிவ் ஆயில் போன்ற நிரம்பாத கொழுப்புக்களைக் கொண்ட உணவுகளை உள்ளெடுக்கும் போது ஒரு முக்கிய புரதத்தின் அளவு அதிகரிப்பது தெரியவந்துள்ளது.
இப் புரதமானது குருதிப்பெருக்கு மற்றும் இதய நோய்களை தடைசெய்யும் ஆற்றலுடையது.
Apolipoprotein A-IV (ApoA-IV) எனப்படும் குருதித் திரவ இழையப் புரதமே மேற்படி நிரம்பாத கொளுப்புக்களின் ஊட்டத்துடன் அதிகரிக்கிறது.
இப்புரதம் குருதிச்சிறுதட்டுக்களின் மேற்பரப்பிலுள்ள கிளைக்கோபுரதங்களை (GPIIbIIIa/ integrin αIIβ3)தடைசெய்கிறது.
இக் குருதிச்சிறுதட்டு வாங்கியானது குருதியில் குருதிச்சிறுதட்டுக்கள் ஒன்றாக திரள உதவி விளைவாக குருதியோட்டத்தை தடைசெய்கிறது.
இச்செயற்பாடு குருதியுறைதல் எனப்படுகிறது.
இது பாதிக்கப்பட்ட குருதிக்குழாய்களில் குருதிப்பெருக்கு ஏற்படுவதைத் தடைசெய்வதால் உயிரிகளைப் பாதுகாக்கும் முக்கிய செயற்பாடாகப் பார்க்கப்படுகிறது.
இருந்தபோதிலும் வழமையாக இரத்தக்குழாய்களில் இவ்வாறான செயற்பாடு நடைபெறுவது விரும்பத்தக்கதல்ல.
காரணம் இவ் உறைதல் செயற்பாடு மூளை மற்றும் இதயத்திற்கு இரத்தம் வழங்கும் இரத்தக் குழாய்களில் ஏற்படுமாயின் அது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இறப்புக்களைக்கூட ஏற்படுத்தக்கூடும்.
ஆனாலும் நிரம்பாத கொழுப்புக்களை உள்ளெடுப்பதால் அதிகரிக்கும் ApoA-IV புரதமானது அவற்றின் வடிவங்களை மாற்றி இரத்த ஓட்டம் விருத்திபெற உதவுகின்றது.
இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாத அபாயங்கள் ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகின்றது.
மேலும் ஆலிவ் ஆயில் போன்ற நிரம்பாத கொழுப்புக்களை எடுத்துக்கொள்ளும் ஒருவர், அதனைத்தொடர்ந்து தக்க ஓய்வை எடுத்துக்கொள்ளும்போது இவ் ApoA-IV புரதமானது மேற்படி நோய்களிலிருந்து சிறப்பான பாதுகாப்பை வழங்குகிறது என சொல்லப்படுகிறது.






