உருளை கொத்தமல்லி பரோடா…

மைக்ரோவேவில் உருளைக்கிழங்கைப் பதமாக வேகவைத்து.
ருசியான பூரணம் தயாரித்து இந்த ரொட்டியை நாம்
செய்யலாம்.
உருளை,கொத்தமல்லி பரோட்டா
உருளை,கொத்தமல்லி பரோட்டா
நிறைய பச்சைக் கொத்தமல்லி சேர்த்துச் செய்தால்
மிகவும் ருசியாக இருக்கிறது.
வேண்டியவைகள்
மூன்று நிதானமான சைஸ்—-உருளைக் கிழங்கு
பச்சைமிளகாய்–2
ருசிக்கு–உப்பு
சீரகப்பொடி,ஆம்சூர்–வகைக்கு அரை டீஸ்பூன்
கோதுமை மாவு–2கப்
வேண்டிய அளவு—எண்ணெய்
நெய்யும் கலந்து உபயோகிக்கலாம்.
ஆய்ந்த இலையாக கொத்தமல்லித் தழை–நிறையவே
செய்முறை—உருளைக்கிழங்கை தண்ணீரில் சுத்தம் செய்து
ஒரு மெல்லிய பாலிதீன் பையில் போட்டுச் சுருட்டி
7நிமிஷம் மைக்ரோவேவில் ஹை பவரில்வைத்து
எடுக்கவும். அல்லது
சுத்த பருத்தித் துணிப் பையை ஈரமாக்கிப் பிழிந்து, அதனுள்
உருளையை வைத்தும் 7 நிமிஷங்கள் ஹை பவரில்
வேகவைத்தும் எடுக்கலாம்.
அல்லது உங்களின் வழக்கம் எதுவோ அதைச் செய்யவும்.
வெந்த உருளைக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு ஒரு
பாத்திரத்தில் போட்டுக் கிழங்கினை நன்றாக மாவாக
மசிக்கவும்.


கோதுமை மாவில் ஒன்றரை கப் எடுத்து,அதனுடன்
ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் கலந்து, உப்பு சேர்த்து
திட்டமாகத் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து மூடி வைக்கவும்
மாவு ஊறட்டும். மீதி மாவு தோய்த்து இட.
பச்சை மிளகாயை நன்றாக வகிர்ந்து அதனுள்ளிருக்கும்
விதைகளை அகற்றி மெல்லியதாகக் கீறி மிகவும்
பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
திட்டமாக உப்பு ,நறுக்கிய மிளகாய், சொல்லியுள்ள
பொடிகள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்,
மசித்த உருளைக்கிழங்கு இவை யாவையும் ஒன்று
சேர்த்துப் பிசையவும்.
கொத்தமல்லிப் பூரணம் ரெடி
மசித்த கிழங்கும்,வேண்டிய ஸாமான்களும்.
மசித்த கிழங்கும்,வேண்டிய ஸாமான்களும்.
இப்போது மாவைப் பிரித்து, 7, 8 உருண்டைகளாக ஸமமாகப்
பிரிப்போம் .
அதே போல் கிழங்குக் கலவையையும், 7,8 பாகமாகப்
பிரித்து ,உருட்டிக் கொள்வோம்.
அப்பளாம் தயாரிக்கும் விதத்தில் , உருட்டிய மாவைச் சின்ன
வட்டங்களாக இட்டு துளி எண்ணெயை அதன் மேல்
தடவவும்.
கிழங்குக் கலவையை அதன் மேல் தட்டையாகச் செய்து வைத்து,
வட்டத்தின் விளிம்பினால் பூரணம் தெரியாமல் இழுத்து மூடவும்.
மேல் மாவில் பிரட்டி திரும்பவும் வட்டமான,மெல்லியதான
அப்பளாம் போல இடவும். அடிக்கடி மாவு தோய்த்து இடலாம்.
இடும் போதே ஒவ்வொன்றாக எடுத்து , திட்டமான சூட்டில்
தோசைக் கல்லைக் காயவைத்து, இரண்டு பக்கமும் ,திருப்பிப்
போட்டு, எண்ணெயோ,நெய்யோ அதன்மேல் தடவி நன்றாகச்
செய்து எடுக்கவும்.
தயிரோ,ஊறுகாயோ தொட்டுக் கொண்டு கூட சாப்பிட்டு விடலாம்.
ஆறினாலும், மெதுவாக ருசியாக இருக்கும்.
ரொட்டி செய்வது போலதான். இட்டதைக் காயும் கல்லில் போடவும்.
லேசாக எண்ணெயைத் தடவி திருப்பிப் போடவும்.
சிறிது அழுத்தம் கொடுத்தால், உப்பிக்கொண்டு மேலெழும்பும்.
எண்ணெயைத் தடவவும். தீ மிதமாக இருக்கட்டும்.
திருப்பிப் போட்டு பதமாக எடுக்கவும்.
சிறியவர்களுக்குக் கொடுக்கும் போது, மிளகாய்க்குப் பதிலாக
சிறிது பொடி சேர்த்துச் செய்யவும்.
மிளகாய் நறுக்கும்போது கொத்தமல்லியா,மிளகாயா என்று
தோன்றும்படி மிளகாயைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
வாஸனையாக இருக்கும்.