மழை வேண்டி அம்மனுக்கு வினோத வழிபாடு…

வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.டி.சேதுராஜபுரம் கிராமத்தில் மழை வேண்டி அரியநாச்சி அம்மனுக்கு சிறப்பு படையல் இட்டு வழிபாடு நடத்தப் பட்டது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் நாட்டு விடைக்கோழி அடித்து குழம்பு வைத்தும், நாட்டுக்கோழி முட்டை அவித்தும் கறிச்சோற்றை எடுத்துக்கொண்டு, அம்மனுக்கு பிடித்த சிம்பலங்கொட்டு மேள தாளத்துடன் புறப்பட்டு, ஊருக்கு வடபுறம் அமைந்துள்ள அரியநாச்சியம்மனுக்கு வாழையிலையில் கொட்டி படையலிட்டனர். பின்னர் பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றியும் பெண்கள் கும்மி அடித்தும் வழிபட்டனர்.

இந்த ஆண்டு பருவமழை நல்ல முறையில் பெய்து நாடு செழிக்க வேண்டும் என்று வேண்டுதலுடன் அரியநாச்சி அம்மனுக்கு வழிபாடு நடைபெற்றது. பின்னர் படையலை பிரித்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. வானம் பார்த்த பூமியை குளிர வைக்க அம்மனை கோழிக்கறி படையலால் குளிர வைத்த மக்களின் வேண்டுதல் நிறைவேறும் எனவும் மக்கள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் பால்பாண்டியன், முத்துகிருஷ்ணன் தலைமையில் இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.