நீலத் திமிங்கலம் ப்ளூவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டில் இருந்து மீள்வதற்குள் அடுத்து மோமோ என்ற ஆபத்தான விளையாட்டு தற்போது அனைவரையும் பயமுறுத்தி வருகிறது.
மோமோ என்ற இந்த விளையாட்டால் மேற்குவங்க மாநிலத்தில் 2 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்லிடப்பேசிக்கு மோமோவிடம் இருந்து அழைப்பு வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் உடனடியாக போலீசுக்கு தெரியப்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோமோ என்ற பெயருடன் வரும் புகைப்படம் அல்லது விடியோ அல்லது லிங்க் என ஏதேனும் ஒன்றை செல்லிடப்பேசியில்( மொபைல்) பதிவிறக்கம் செய்தாலும் உடனடியாக அந்த செல்லிடப்பேசியில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் மோமோ தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு மொபைலின் சொந்தக்காரரை மிரட்ட ஆரம்பிக்கும்.
எவ்வாறு இது பரவுகிறது:
சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப் போன்றவற்றின் வாயிலாக இந்த மோமோ விளையாட்டு பரவுகிறது.
செல்லிடப்பேசியில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் மோமோ, பின்பு அவர்களை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டுகிறது.
இது யாரை, எப்படித் தேர்வு செய்கிறது:
முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில், தங்களது விரக்தி, ஏமாற்றம் போன்ற வாசகங்களை பதிவு செய்யும் நபர்களின் எண்களைத் தேடிப்பிடித்து கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) லிங்க் அனுப்புகிறது.
எங்கு இருந்து அனுப்பபடுகிறது:
மோமோ என்று வரும் மொபைல் எண்களை எந்த நாட்டில் இருந்து யார் இயக்குகிறார்கள் என்பதைக் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. குறிப்பாக பெரும்பாலான எண்கள் மெக்சிகோ, கொலம்பியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வருகிறது.
மோமோ என்னவெல்லாம் செய்யும்:
வைரஸ் மூலம் மொபைலை மோமோ தனது கட்டுப்பாட்டில் எடுத்ததும், அதன் கேமரா, மைக்ரோ ஃபோன் போன்றவற்றை தாங்கவே இயக்கி மொபை போனை வைத்திருப்பவருக்குத் தெரியாமலேயே தகவல்களை சேகரிப்பதும், பேசுவதை பதிவு செய்வதும் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது.
இறுதியில், ஒரு சவாலைக் கொடுத்து அதை செய் அல்லது சில தகவல்களை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டுவதால், மோமோ விளையாடும் நபர் இறுதியாக தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
மோமோ என்பது ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட பல்லட் ஆஃப் ஷினிகாமி என்ற நவாலில் வரும் கதாப்பாத்திரமாகும். இதற்கு மரணத்தின் பெண் கடவுள் என்று அர்த்தம். அந்த நாவலில் வரும் கதாப்பாத்திரத்தைப் போலவே மரணத்தை நோக்கி மோமோவும் அழைத்துச் செல்கிறது.
மோமோ விளையாட்டில் ஈடுபட்டு முதன்முதலாக தற்கொலைச் சம்பவம் அர்ஜென்டினா நாட்டில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







