சமூகத்தில் நடக்கும் பல அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் இசையமைப்பாளரும்,வளர்ந்து வரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஆங்கிலத்தில் இருந்த தனது இன்ஷியலை தமிழில் மாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது திறமையால் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ். பின்னர் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர் திரிஷா இல்லைனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அவர் நாட்டில் நடக்கும் பல அநீதிகளுக்கு எதிராக தனது டிவிட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். மேலும் ஜல்லிக்கட்டு, அனிதா மரணம், ஸ்டெர்லைட், நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எவருக்கும் அஞ்சாமல் தயக்கமின்றி குரல் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் தனது பெயருக்கு முன் ஆங்கிலத்தில் இருந்த ஜி.வி என்ற இனிஷியலை தற்போது கோ.வெ என மாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “ உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ், எனை ஆட்கொண்ட தமிழ்…இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் … #தமிழ்விதியெனசெய்” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் யாவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.








