பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளாகும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராடிவரும் பெண்களை அரசியல்வாதிகள் உட்பட அதிகாரிகள் பாலியல் வன்கொடுமைகளுக்குட்படுத்துவதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு இன்றைய (30.08.2018) தினம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிறிலங்காவின் தென்பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்து தவிக்கும் அநுலா ஆரியவதி என்ற பெண் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஓகஸ்ட் 30 ஆம் திகதியான இன்றைய தினம் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள ஜே.ஆர்.ஜயவர்தன கேந்திர நிலையத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்விற்கு முன்னதாக விகாரமாதேவி பூங்காவிற்கு முன்னால் இருந்து ஜயவரத்னபுர கேந்திர நிலையம் வரை காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் உட்பட விசேட விருந்தினர்கள் மற்றும் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்ட பேரணியொன்றும் இடம்பெற்றது.

இதனையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட கணவனை இழந்து நீண்ட காலமாக தேடி அலையும் மாத்தறை பகுதியைச் சேர்ந்த அனுலா ஆரியவதி என்ற பெண் உரையாற்றுகையில், நீதிகோரி செல்லும் இடங்களில் அதிகாரிகளினாலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுக்க நேரிடுவதாக தெரிவித்தார்.

இது குறித்து அனுலா ஆரியவதி மேலும் தெரிவித்ததாவது.,

“ சிறிலங்கா போக்குவரத்து சபையில் பட்டம் பெற்ற ஒருவராக பாலி டிப்போவில் கடமையாற்றியவர் எனது கணவர். 45 ரூபா சம்பள உயர்வு கோரிய ஒரே காரணத்திற்காக எனது கணவரை கொலை செய்தனர்.

பலவருட காலமாக எனக்கு நீதி கிடைக்கவில்லை. எனினும் தற்போது காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் மீது நம்பிக்கையொன்று உருவாகியுள்ளது. எமது சகோதர உறவுகளுக்கு இந்த காணாமல் போனோருக்கான அலுவலகத்தினூடாக மேற்கொள்ளப்படும் உதவிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

எமது சகோதர மக்களுக்கான நீதியை பெற்றுத்தருமாறு கோரியிருந்தோம். எனினும் எமக்கு இதுவரை நீதியைப் பெற்றுத்தரவில்லை. அனைத்து அரசாங்கங்களும் தேர்தல் காலங்களில் மாத்திரமே எமது உரிமைகள் குறித்து பேசுகின்றனர்.

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெற்கின் தேசிய வீரர், எமது பிரச்சினைக்காக ஆரம்ப காலங்களில் எம்மோடு இணைந்து வீதிகளில் இறங்கி போராட்டங்களினை மேற்கொண்டார். எனினும் அவர் ஆட்சிபீடம் ஏறியதும் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டார்.

நான் மஹிந்த ராஜபக்சவுக்கு ஒன்றை கூற விரும்புகின்றேன். உங்கள் பிள்ளையொருவரோ அல்லது நாட்டில் ஆட்சிபுறியும் ஒருவரினது பிள்ளையோ அல்லது உறவினர் ஒருவரோ இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டிருப்பாரானால் எவ்வாறான நிலமைக்கு தள்ளப்படுவீர்கள்? அதற்கு எவ்வாறு முகம் கொடுப்பீர்கள்?

கடவுளால் பூமியில் வீசப்பட்டவர்கள் அல்ல நாம்., அவ்வாறிருக்கையில் ஏன் எமக்கு மாத்திரம் இவ்வாறு செய்தனர்?. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் எந்தவொரு அரசியல் பிரமுகரின் பிள்ளைக்கோ அல்லது சாதாரண மக்களுக்கோ இவ்வாறானதொரு நிலை இனிமேலும் இடம்பெறக்கூடாது என நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

நாம் உயிரிழந்தாவது இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். என்னை அரசியலில் சூழ்ந்தவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினர். எனது பற்களை உடைத்து, வயிற்றில் தாக்கி பிள்ளைகளை நிலத்தில் அடித்தனர். இவ்வாறு எனக்கு பாலியல் பலாத்காரங்கள் இடம்பெற்றாலும் நான் வெட்கப்படவில்லை. நாட்டின் எமது சகோதர மக்களுக்கு நீதி கிடைக்கப்பெற வேண்டும்.

இந்த நிகழ்வில் யுத்தத்தின் இறுதி நாட்களில் ஓமந்தையில் வைத்து தனது கணவரை சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைத்த நிலையில் தொலைத்துத் தேடித் திரியும் யோகேந்திரம் வீணா என்ற தாயாரும் கலந்துகொண்டிருந்தார்.

தனது கைகளால் சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைத்த தனது காணவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை எனவும், தன்னைப் போல பல்லாயிரம் பெண்கள் தமிழர் தாயகத்தில் விதவைகளாக்கப்பட்டுள்தாகவும் குறிப்பிட்டார்.