“கருவறையில் சுமந்த மகளை, ஒரே குழியில் கல்லறையிலும் சுமக்கும் தாய்”

குருநாகல் மாவட்டம் மெல்சிறிபுர, போகஹபிட்டிய பிரதேசத்தில், 34 வயதுடைய அனுஸா தமயந்தி குமாரி என்ற தாயொருவர், மகளின் திடீர் மரணத்தைக் கேட்டு மாரடைப்பால்  உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் 14 வயதுடைய மகள் நேத்மி நிஷாதி பெரேரா நீண்ட காலமாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 24ம் திகதி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மகளின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையில் காணப்பட்ட நிலையில், மகளின் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் கடந்த 25ம் திகதி சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திடீரென மயக்கமுற்று விழுந்த குறித்த பெண்ணை வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் எவ்வித நோயினாலும் பாதிக்கப்படவில்லை எனவும் அவருக்கு மகளின் இறப்பு அதிர்ச்சியை அளித்துள்ளதால் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தாய் மற்றும் மகளின் சடலம் இன்று மெல்சிறிபுரயில் உள்ள பொது மயானத்தில் ஒரே குழிக்குள் புதைக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.