`முதலமைச்சரானால் என் முதல் கையெழுத்து இது தான்!’ – கமல்

நான் முதலமைச்சரானால் லோக் பால் சட்டத்தை வலிமையாக்கும் வகையில், என்னுடைய முதல் கையெழுத்து இருக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் 11 பிரிவுகளில் 35 பெண்களுக்கு விருதுகளும், மேலும் 9 பெண்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்களுக்கு, கமல்ஹாசன் விருது வழங்கினார். பின்னர் பேசிய அவர், `மக்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளதால் அரசியலுக்கு வந்துள்ளேன். அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்ய அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலைக் கண்டு ஒதுங்கி நிற்காமல், பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார். முதலமைச்சரானால் உங்களுடைய முதல் கையெழுத்து எதற்கு என்று நடிகர் பார்த்திபன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கமல்,`தற்போதைய லோக்பால் சட்டம் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது.  நான் முதல்வராக ஆனால் மீண்டும் லோக்பால் சட்டத்தை வலிமையாக்கும் வகையில் என் முதல் கையெழுத்து போடுவேன்’ என்றார். மேலும் திமுக தலைவராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கமல், கலைஞர் நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு வந்தால் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.