கருவளையம் – தடுக்கும் வழிமுறைகள்…..

தூக்கமின்மை, சத்துக்குறைவு, தோலில் உண்டாகும் மாற்றம் போன்ற காரணங்களால், நாளடைவில் கண்களுக்குக் கீழே கருவளையம் உண்டாகிறது. இதை ஆரம்பத்திலேயே கவனித்தால் சரி செய்துவிடலாம்.

தூக்கமின்மை, சத்துக்குறைவு, தோலில் உண்டாகும் மாற்றம் போன்ற காரணங்களால், நாளடைவில் கண்களுக்குக் கீழே கருவளையம் உண்டாகிறது. கருவளையம் வந்தபிறகு முகமே பொலிவிழந்து போவதாக உணர்கிறோம். தோலில் ஏற்படும் அதிக நிறமி காரணமாகவே இந்தக் கருவளையம் உண்டாகிறது. இதனால் கண்ணுக்கு ஆபத்தோ, வேறு எந்தத் தொந்தரவோ வருவதில்லை. இது, வெறும் அழகுக் குறைபாடுதான். இதை ஆரம்பத்திலேயே கவனித்தால் சரி செய்துவிடலாம்.

கண்ணைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மெல்லியது. வெயிலில் சுற்றுவது, கண்களை அடிக்கடி கசக்குவது, தூங்காமல் இருப்பது, அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவற்றால் கருவளையம் உண்டாகிறது. வைட்டமின் குறைபாடுகள் மற்றும் கடும் காய்ச்சல், நிமோனியா, புற்றுநோய், காசநோய் போன்றவை தாக்கும்போதும் இந்தக் கருவளையம் உருவாகிறது.

கண்களுக்குப் போதிய ஓய்வு தருதல், வைட்டமின் ஏ,ஈ, உணவுகளை சரியாக எடுத்துக்கொள்ளுதல், இரவில் விளக்கொளியை சரியாகப் பயன்படுத்தல், கணினியில் பணிபுரியும்போது கவனமாக இடைவெளி கொடுத்தல், மன உளைச்சல் இல்லாமல் மகிழ்ச்சியாக இருத்தல் போன்றவையே இந்தக் கருவளையம் உருவாகாமல் காக்கும்.

அப்படியும் உங்கள் கண்களைக் கருவளையம் தாக்கினால், கவலைப்பட வேண்டாம். கவலையே அந்தப் பிரச்சனையைப் பெரிதாக்கி விடக்கூடும். உருளைக்கிழங்கு, வெள்ளரி, புதினா, கற்றாழை போன்ற இயற்கையான காய்கறிகள், பழங்களைக்கொண்டே கருவளையத்தை நீக்கிவிடலாம். அப்படியும் நீங்கவில்லை என்றால், இதற்கென இருக்கும் மருத்துவ ஆலோசகர்களை அணுகி, முகப்பூச்சுகளை எடுத்துக்கொள்ளலாம்.