மயிலிட்டியில் சிறிலங்கா அதிபர் – பாடசாலைகளை விடுவிக்க இணக்கம்

யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

மயிலிட்டிப் பகுதியில் நடந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறிலங்கா அதிபரிடம், சிறிலங்கா படையினரின் வசமுள்ள பொதுமக்களின் ஏனைய காணிகள், பாடசாலைகள், ஆலயங்களையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இதையடுத்து, சிறிலங்கா இராணுவத் தளபதிகளுடன் கலந்துரையாடிய சிறிலங்கா அதிபர், மயிலிட்டிப் பகுதியில் இதுவரை விடுவிக்கப்படாத பாடசாலைகளை இன்னும் இரண்டு வாரங்களில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.