அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்ற வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் கிரிஸ்டோபர் வாட்ஸ். அவரது மனைவி ஷேனான் வாட்ஸ். அவர் கர்ப்பிணியாக இருந்தார். அவர்களது குழந்தைகள் பெல்லா(4 வயது), செலிஸ்டீ(3 வயது). கிரிஸ்டோபர் வாட்ஸ், அவரது மனைவி மற்றும் மகள்கள், காணாமல் போய்விட்டனர். அவர்கள் திரும்பி வரவேண்டும் என்று ஒரு வாரத்துக்கு முன்னதாக பேஸ்புக்கில் தொடர்ச்சியாக உருக்கமானப் பதிவுகளைப் பதிவிட்டுவந்தார்.
அவர்களுடனான நினைவுகளைத் தொடர்ந்து பேஸ்புக்கில் பகிர்ந்தார். அவருடைய பதிவுகள் எல்லோருக்கும், அவர்மீது இரக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. காவல்துறையும் காணமல் போனவர்களைப் பற்றி விசாரணை நடத்திவந்தனர். காவல்துறையினர் விசாரணையில், ஷேனான் வாட்ஸின் உடல் அனாடார்கோ பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. குழந்தைகளான பெல்லா மற்றும் செலிஸ்டியின் உடல்களும் அருகில் கண்டெடுக்கப்பட்டன. கேஸ் மற்றும் எண்ணெய் நிரப்பப்பட்ட உருளைகளிலிருந்து அழுகிய நிலையில் பெல்லா மற்றும் செலிஸ்டியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.






