தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்?

தமிழ் அரசியல் கட்சிகளிற்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி, ஒன்றுபட்ட சக்தியாக்கும் முயற்சியொன்றை பிரித்தானிய தமிழர் பேரவை ஆரம்பித்துள்ளது. தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தின் தலைவர்களையும் இலண்டனில் ஒன்றுகூட வைக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது.

முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளின் தலைவர்களை இலண்டனில் எப்பொழுது, எப்படி ஒன்றுகூட வைப்பதென்று ஆராய்ந்து, தீவிர முயற்சிகளில் பிரித்தானிய தமிழர் பேரவை இறங்கியுள்ளது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன், ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பிலிருந்து கூட்டத்திற்கு கலந்துகொள்வதில் ஆட்சேபணையில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்ரோபர் நடுப்பகுதியில் தனக்கு வசதியாக இருக்கும் என முதலமைச்சர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இந்த சமயத்திலேயே அனைவரையும் ஒன்றுகூட வைக்க ஏற்பாட்டாளர்கள் முயற்சிக்கிறார்கள்.

இந்த சந்திப்பில் கலந்துகொள்வதில் கொள்கையளவில் சிக்கலெதுவுமில்லையென தமிழரசுக்கட்சியும் ஏற்பாட்டாளர்களிற்கு அறிவித்துள்ளது. எனினும், இரா.சம்பந்தன் கலந்துகொள்வது பற்றி இதுவரை உறுதிசெய்ய முடியாத நிலைமையில் ஏற்பாட்டாளர்கள் இருப்பதாக தெரிகிறது. எனினும், இரா.சம்பந்தன், மாவை இருவருமே கூட்டத்திற்கு பிரசன்னமாகியிருக்க வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் விரும்புவதாக தெரிகிறது.