மாட்டிக்கொண்டு தவிக்கும் திமுக..! விடாமல் துரத்தும் சிபிஐ..!

பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சன் தொலைக்காட்சிக்கு பிஎஸ்என்எல் இணைப்புகளை வழங்குவதில் முறைகேடு நடந்தது. இதன் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த மோசடி சம்பந்தமாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மற்றும் பி.எஸ்.என்.எல் பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந் நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளரான கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சிபிஐ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மாறன் சகோதரர்கள் விடுவித்தது செல்லாது என தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.வசந்தி , இது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு அன்றைய தினம் 7 பேரும் ஆஜராக வேண்டும் என உத்திரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.