மீண்டும் விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்!

அமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்கு செல்ல உள்ள ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில், இந்தியாவின் சுனிதா வில்லியம்ஸ் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பூமி உள்ளிட்ட கிரகங்களை ஆராய்ச்சி செய்ய, விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, வீரர்-வீராங்கனைகள் சுழற்சி முறையில் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையங்கள், பூமியை தவிர இதர சில கிரகங்களில் மனித குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

எனவே, அங்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனமான Space X-வுடன் இணைந்து, அமெரிக்கா விண்வெளி ஓடங்களை உருவாக்கியுள்ளது. இந்த ஓடங்களை அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அமெரிக்கா சோதனை ஓட்டத்திற்காக அனுப்ப உள்ளது.

HT

அதற்காக ஒன்பது பேர் கொண்ட குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்(52) இடம்பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று, 321 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் ஆவார்.

விண்வெளிக்கு செல்லும் ஒன்பது பேர் குழு
  • ஜோஷ் கஸ்ஸாடா(45)
  • சுனிதா வில்லியம்ஸ்(52)
  • ராபர்ட் பென்கென்(48)
  • டக்லஸ் ஹர்லே(51)
  • எரிக் போயி(53)
  • நிக்கோலே மன்(41)
  • கிறிஸ்டோபர் ஃபெர்குசென்(56)
  • விக்டர் க்ளோவர்(42)
  • மைக்கேல் ஹாப்கின்ஸ்(49)