மகிந்தவிற்கு எதிராக களமிறங்கியுள்ள அமெரிக்கா

அமெரிக்க பிரஜையான பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கையில் மேற்கொண்டு வரும் அரசியல் நடவடிக்கைளில் அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வு சேவை தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு அமைய மகிந்த ராஜபக்ச பொறுப்புக் கூற வேண்டிய பெருந்தொகையான நிதி குற்றச் செயல் ஒன்று குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வு சேவை, மிக விரைவில் சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இலங்கைக்கு சர்வதேச ரீதியில் நற்பெயரை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை மேற்கொள்ளவெனக் கூறி, அமெரிக்கரான இமாட் சுபேரி என்பவருக்கு 87 கோடியே 20 லட்சம் டொலர் ஒப்பந்தம் ஒன்றை வழங்கியமை தொடர்பாகவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை ரூபாய் மதிப்பில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 110 ரூபாய் என்று எடுத்துக்கொண்டால், இந்த திட்டத்திற்காக சுமார் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த பணத்தை பயன்படுத்தி, சர்வதேச ரீதியில் இலங்கைக்கு நற்பெயரை ஏற்படுத்தும் பிரசாரத்திற்கு பதிலாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாக மகிந்த ராஜபக்சவிற்கு நற்பெயரை ஏற்படுத்தும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதாக கடந்த 2010 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வந்த சஜின் வாஸ் குணவர்தனவின் தலையீட்டில், இமாட் சுபேரி என்ற அமெரிக்கருக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.

அப்போது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அஜித் நிவாட் கப்ரால், டொலரில் இந்த பணத்தை செலுத்த தேவையான நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

இந்த பாரிய நிதி மோசடி சம்பவம் குறித்து நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த போது, சஜின் வாஸ் குணவர்தனவை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் பின்னர் அந்த விசாரணைகள் கைவிடப்பட்டது.