டோக்யோ: ஜப்பானில் ஏழு மாத குழந்தை ஒன்று தனது அழகான தலை முடியாலும், முகபாவங்களாலும் இணையத்தில் ‘சூப்பர் ஸ்டாராக’ உருவெடுத்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த ஏழு மாத பெண் குழந்தை சாங்கோ. கொழு கொழு கன்னமும், பெரிய வட்ட கண்களும் என்று உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகுடன் இருக்கும் இவளது சிறப்பம்சம் என்றால் அவளது அழகு கொஞ்சும் அடர்த்தியான தலைமுடிதான்.
இந்நிலையில் இவள் பெயரில் கடந்த மே மாதம் சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமில் கணக்குத் துவங்கப்பட்டது.
அதில் இருந்து இவளது பதிவுகள் ஓவ்வொன்றும் இன்ஸ்ட்டாகிராமில் மிகவும் பிரபலம் ஆகி விட்டன.
இதுவரை வெறும் 47 பதிவுகள் மட்டுமே இவளது கணக்கிலிருந்து பதியப்பட்டுள்ளது.
ஆனால் ஒவ்வொன்றும் குறைந்த பட்சம் 10 ஆயிரம் லைக்குகளைப் பெறுகின்றன. இதுவரை நடக்கவோ, பேசவோ செய்ய்யாத இவளை இன்ஸ்ட்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையானது 1.5 லட்சத்தை எட்டி விட்டது.
ஒவ்வொரு பதிவிலும் வித விதமான முக பாவங்களுடன் , மாறுபட்ட தலையலங்காரத்துடன் இணைய உலகின் சூப்பர் ஸ்டாராகவே சாங்கோ வலம் வருகிறாள் என்று சொன்னால் அது மிகையாகாது எனலாம்.