உலகிலேயே அமைதியான நாடு எது தெரியுமா?

உலகிலேயே அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்த இடங்களில் நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் உள்ளன.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் இதழ் ஒன்றும், பொருளாதாரம் மற்றும் அமைதி குறித்து ஆய்வு செய்யும் ஆஸ்திரேலிய நிறுவனமும் இணைந்து உலகின் அமைதியான நாடுகள் குறித்த இந்த ஆய்வை மேற்கொண்டன.

சர்வதேச அளவில் 163 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் கம்பீரமாக நீடிக்கிறது.

அதேவேளையில், உலக அளவில் அமைதியான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்து, பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு 9-வது இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து இந்த ஆண்டு 12-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, ராணுவமயமாக்கல் பிரிவில் சுவிட்சர்லாந்து பெற்றிருக்கும் மோசமான மதிப்பீடு.

அத்துடன், சமீபகாலமாக சுவிட்சர்லாந்தில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு ராணுவ தளவாட ஏற்றுமதி அதிகரிப்பும் பின்னடைவைத் தந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த விவகாரத்தில் ரஷியா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்தையும் சர்வதேச பார்வையாளர்கள் ஒப்பீடு செய்யத் துவங்கியுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

மிகவும் அமைதியான நாடுகள் பட்டியலின் கடைசி இடங்களில் தெற்கு சூடான், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகியவை உள்ளன.

சர்வதேச அளவில் 91 நாடுகளின் அமைதி சீர்கெட்டு வருவதாகவும், கடந்த ஆண்டைவிட 71 நாடுகள் அமைதி வழியில் முன்னேறியுள்ளதாகவும் குறிப்பிட்ட ஆய்வு கூறுகிறது.