“தற்கொலை முயற்சியும்… மூணு நாள் கோமாவும்..!” ‘தென்றல்’ சூஸன் ஜார்ஜ்

என் அனுபவத்தில் சொல்றேன், யாரும் தற்கொலைக்கு முயற்சி செய்யாதீங்க. பிடிச்சவங்ககிட்ட மனம்விட்டுப் பேசினாலே பாதி பாரம் குறைஞ்சுடும். நிதானமா யோசிச்சு முடிவெடுத்தால், கெட்ட எண்ணம் விலகிடும்.”

“என்னோட ஆக்டிங் பயணம், ரொம்பவே ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. பர்சனல் பிரச்னைகளால், என் ஆக்டிங் பயணத்துக்குச் சில காலம் பிரேக் கொடுத்திருந்தேன். இப்போ மெச்சூரிட்டி ஆகிட்டேன். நிச்சயம், நடிப்புத் துறையில் எனக்கான அடையாளத்தைப் பெறுவேன்” எனத் தெளிவான குரலில் பேசுகிறார், சினிமா மற்றும் சின்னத்திரை நடிகை சூஸன் ஜார்ஜ்.

சூஸன் ஜார்ஜ்

“சினிமா, சீரியல்… உங்களுக்கு நல்ல அடையாளம் கொடுத்தது எது?”

“எல்லாமே திரைதான். ரெண்டையும் பிரிச்சுப் பார்க்கிறதே எனக்குப் பிடிக்காது. சீரியல் மூலமாகதான் என் ஆக்டிங் பயணம் தொடங்கிச்சு. ‘தென்றல்’ சீரியலில் நடிச்ச, ஆட்டோகாரி கல்யாணி ரோல், மக்கள் மனசுல இடம்பிடிச்சது. அப்போ, ‘மைனா’ பட வாய்ப்பு வந்ததால், அந்த சீரியலிலிருந்து விலகிட்டேன். ‘மைனா’ படத்தில் நெகட்டிவ் ரோலில் சிறப்பா நடிச்சேன். ‘நண்பேண்டா’ உள்ளிட்ட பல படங்களில் நடிச்சேன். சினிமா, சீரியல்னு மாறி மாறி நடிச்சுட்டிருக்கேன். சின்ன கேரக்டரா இருந்தாலும், அது என் நடிப்புத் திறமைக்கு நல்ல ஸ்கோப்பா அமையணும்; மக்கள் மனசுல பதியணும். சிஸ்டர், ஹீரோயின் ஃப்ரெண்டுனு நிறைய ரோல்ஸ் வந்துச்சு. ஆனால், கொத்தமல்லி, கறிவேப்பிலை மாதிரி நடிக்கிறதில் விருப்பமில்லை.”

சூஸன் ஜார்ஜ்

“நடுவில் சில காலம் நடிக்காமல் இருந்தீங்களே…”

“‘மைனா’ படத்துக்குப் பிறகு, சினிமா, சீரியல், டெலிவிஷன் நிகழ்ச்சிகள் என நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. அப்போ, நான் ஒருத்தரை காதலிச்சுட்டிருந்தேன். அவர் மேலே ரொம்பவே அன்பு வெச்சிருந்தேன். கல்யாணம் நெருங்கும் வேளையில், அவரது குணம் நெகட்டிவா மாறிச்சு. அவரால், நிறைய மன உளைச்சலுக்கு ஆளானேன். ஒருகட்டத்தில் அவர் எனக்குச் சரியான வாழ்க்கைத் துணை இல்லைனு பிரிஞ்சுட்டேன்; கல்யாணமும் நின்னுடுச்சு. அப்போ, ஒரே நேரத்தில் வந்த பல வாய்ப்புகளை எப்படி செலக்ட் பண்றது, எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதுனு சரியா முடிவெடுக்க முடியலை. அதனால், வொர்க் பண்ணின சில புராஜெக்ட்ல சங்கடமான சூழல். ஆனாலும், என்னோடு வொர்க் பண்ணின யாருமே என் மேல கோபப்படலை. நான் நல்லா இருக்கணும்னு நினைச்சு உதவினாங்க. அந்த வகையில், நான் ரொம்ப லக்கி. ஆனாலும், அப்போ நான் தோற்றுப்போயிட்டதா நினைச்சு, ரெண்டு வருஷம் எதிலும் நடிக்கலை.

ஒருகட்டத்தில் தற்கொலைக்கு முயன்றேன். மூணு நாள் கோமாவில், வென்டிலெட்டரில் இருந்து மீண்டுவந்தேன். என் அம்மா இல்லாமல் போயிருந்தால், என்னவாகி இருப்பேன்னு தெரியலை. அப்போ, சின்னத்திரை இயக்குநர்களான அழகர் சாமி மற்றும் பிரம்மா இருவரும் எனக்கு வழிகாட்டியாவும் ஆசானாகவும் இருந்தாங்க. இப்போ, அதை நினைக்கிறப்போ முட்டாள்தனமா முடிவெடுத்துட்டதா நினைக்கிறேன். இனி எந்தப் பிரச்னை வந்தாலும், எதிர்த்துப் போறாடணும்னு உறுதியா இருக்கேன். என் அனுபவத்தில் சொல்றேன், யாரும் தற்கொலைக்கு முயற்சி செய்யாதீங்க. பிடிச்சவங்ககிட்ட மனம்விட்டுப் பேசினாலே பாதி பாரம் குறைஞ்சுடும். நிதானமா யோசிச்சு முடிவெடுத்தால், கெட்ட எண்ணம் விலகிடும். பிறகு, அழகர் சாமி சார் இயக்கின ‘ஏழாம் உயிர்’ சீரியலில் லீட் ரோலில் நடிக்கவெச்சார். அப்புறம், ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் 3-வது சீசனில் நடிச்சுட்டிருந்தேன். சினிமா வாய்ப்பினால், அதிலிருந்து விலகிட்டேன். ‘கும்கி 2’ படத்திலும் நடிச்சுட்டிருக்கேன்.”

சூஸன் ஜார்ஜ்

“அமலா பால் உடன் நடிச்ச அனுபவம்…”

” ‘ராட்சசன்’ படத்தில் முக்கியமான போலீஸ் ரோலில் நடிச்சேன். அதில், அமலா பால் ஹீரோயின். நாங்க இருவரும் ‘மைனா’ படத்தில்தான் சினிமா பயணத்தைத் தொடங்கினோம். அவங்க பெரிய ஹீரோயினி ஆகிட்டாங்க. ‘ராட்சசன்’ ஷூட்டிங்ல என்னைப் பார்த்ததும், ஓடிவந்து கட்டிப்பிடிச்சு பேசினாங்க. ‘நீ பெரிய ஆளாகிட்டமா’னு தமாஷா சொன்னேன். ‘அப்படியெல்லாம் இல்லை’னு சொல்லி ரொம்ப ஃப்ரெண்ட்லியா பேசினாங்க.”

“உங்க பிளஸ் மற்றும் மைனஸ் பற்றி…”

“ஒரு புராஜெக்டுக்கு கமிட் ஆகிட்டால், எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், என் வொர்க்கை முழு திருப்தியோடு செய்து முடிச்சுடுவேன். ஒருநாளும் சலிச்சுக்க மாட்டேன். இது என் பிளஸ். கோபம்தான் என் மைனஸ். அதுவும், எனக்குக் கொடுத்த வாக்குறுதிபடி நடந்துக்காமல் போனால்தான் கோபம் வரும்.”

சூஸன் ஜார்ஜ்

“மீடியா துறையைச் சேர்ந்த உங்க நண்பர்கள் யார்?”

“நிறைய ஃப்ரெண்ட்ஸ் பலர் உண்டு. ஆனால், அவங்களில் பலரும் சந்தோஷத்தில் மட்டும்தான் பங்கெடுப்பாங்க. துன்பத்திலும் எனக்குக் கைக்கொடுக்கும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ், நீலிமா ராணி, ‘தென்றல்’ ஸ்ருதி, மகாலட்சுமி எனச் சிலர் மட்டுமே.”