ரகசிய அறையில் வைஷ்ணவி… ஸ்ருதியும் யாஷிகாவும் ஒண்ணு!

பிக் பாஸ், முந்தைய நாளோடு ஒப்பிடும்போது கமலின் பஞ்சாயத்தில் இன்று சுவாரஸ்யம் இருந்தது. நீண்ட நாட்களாக காத்திருப்பில்  இருந்த சில சர்ச்சைகளை இன்று பேசித் தீர்த்தார், கமல். ஒரு பிரச்னையைப் பற்றி சம்பந்தப்பட்டவரின் மனம் புண்படாமல் சூசகமாக சுட்டிக் காட்டுவது ஒரு கலை. அது கமலுக்கு நன்கு வாய்த்திருக்கிறது. இந்த விஷயத்தில்தான் மும்தாஜ் பின்தங்கியிருக்கிறார்.

கமல்ஹாசன் - பிக் பாஸ்

சமூக வலைத்தளங்களில் மும்தாஜுக்கு ஆதரவாக சில குரல்கள் அழுத்தமாக ஒலிப்பதைக் கவனிக்கிறேன். மும்தாஜ் என்றல்ல, ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள் ஒலிக்கின்றன. நன்மை மற்றும் தீமையின் கலவைதான் மனிதன். சாத்தியமான அளவிற்கு கீழ்மைகளைக் கட்டுப்படுத்துவதே, நாகரிக உலகிற்குள் நாம் எத்தனை தூரத்திற்கு நகர்ந்திருக்கிறோம் என்பதன் அடையாளம்.

மும்தாஜிடம் உள்ள நல்லியல்புகளைப் பற்றி இந்தத் தொடரில் பல முறை குறிப்பிட்டுள்ளேன். ‘வெளிப்படைத்தன்மை’ என்பது அவற்றில் ஒன்று. வெளிப்படையாக இருப்பது ஒருவகையிலான நற்குணம்தான். ஆனால் நம்முடைய வெளிப்படைத்தன்மையால் எதிராளி புண்படுகிறார் என்று தெரிந்தால், எதிர் தரப்பின் வருத்தத்தில் நியாயமுள்ளது என்பதை அறிந்தால், நம்முடைய வெளிப்படைத்தன்மையை கட்டுப்படுத்திக்கொள்வதும் ஒரு நற்குணமே. மும்தாஜிடம் இதர நற்குணங்கள் இருந்தாலும் அகங்காரம், பிடிவாதம் போன்றவைகள் மிகுதியாக இருக்கின்றன. ‘தாயுள்ளத்திற்கும் கெத்திற்கும் இடையில் அவர் அல்லாடுகிறார்’ என்று பொன்னம்பலம் குறிப்பிட விரும்புவதும் இதையே.

மும்தாஜிடம் அடிப்படையிலேயே ஒரு மேட்டிமைத்தனம் இருக்கிறது. ‘ஓரடி உயரத்தில்’ நின்றுகொண்டு மற்றவர்களை கீழே நோக்கி மலினமான பார்க்கும் பார்வை. இதனாலேயே அவர் இறங்கி கனிவாக வரும் காட்சிகள்கூட நடிப்போ என்று தோன்றிவிடுகிறது. குறிப்பாக துவக்கம் முதலே சென்றாயனின் மீது அவர் காட்டும் பாரபட்சமும், இணக்கமின்மையும் முறையற்றதாக இருக்கிறது. ‘சமையல் டீம்ல சேர்த்துக்கங்களேன்’ என்று வேண்டுகோளாக கமல் சொன்னபோதுகூட அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ‘சென்றாயனால் சுத்தமாக இருக்க முடியாது’ என்கிற முன்தீர்மானம் அவரிடம் இருக்கிறது. முன்பே இதைப் பார்த்தோம் ‘அடித்தட்டு மக்கள் இப்படித்தான் இருப்பார்கள், அவர்களை திருத்த முடியாது’ என்பது போன்ற மேட்டிமை மனோபாவம் உள்ளவர்களிடம் அழுத்தமாக இருக்கிற அதே தன்மை, மும்தாஜிடமும் உள்ளது.

“அவர் சத்தமாக பேசுகிறார். அவருடன் இணக்கமாக என்னால் பணி புரிய முடியாது’ என்று பல்வேறு பாவனையான காரணங்களைக் கூறி சென்றாயனை தவிர்க்கப் பார்க்கிறார் மும்தாஜ். இதன் மூலம் சென்றாயனை மட்டம் தட்ட முயல்கிறார்.

மும்தாஜ் சொல்வது போல இது ஒரு கேம்ஷோ தான். நிச்சயம் குடும்பம் அல்ல. ஆனால் வெவ்வேறு தரப்பில் இருந்து வந்திருக்கும் நபர்களிடம் இணக்கமாகவும் சகிப்புத்தன்மையுடனும் ஒருவரால் இயங்க முடிகிறதா என்பதை சோதிப்பதே இந்த விளையாட்டின் அடிப்படையான நோக்கம். நம் வாழ்க்கையே பெரிய கேம் ஷோதான். அங்குமே இந்த விளையாட்டுதான் நடந்து கொண்டிருக்கிறது. மனச்சாட்சிதான் நம் காமிராக்கள். சென்றாயனின் குணாதிசயங்களோடு மும்தாஜிற்கு ஒரு தம்பி இருந்தால், இத்தனை எளிதாக தூக்கியெறிந்து விடுவாரா? நிச்சயம் மாட்டார்.

போட்டியாளர்கள் - பிக் பாஸ்

கடந்த சீஸனிலும் சரி, இந்த சீஸனிலும் சரி, ஒவ்வொரு போட்டியாளருக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஏராளமான பின்னூட்டங்கள் சமூக வலைத்தளங்களில் பொங்கி வந்து கொண்டேயிருக்கின்றன. போட்டியாளர்களின் சாதக, பாதகங்களைப் பற்றி மக்கள் ஆவேசமாக பல தீர்ப்புகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் – ‘இதோ.. இந்தப் போட்டியாளரின் கீழ்மைகள் என்னிடமும் இருக்கின்றன. பார்க்கவே அவமானமாக இருக்கிறது. மனச்சாட்சி உறுத்துகிறது. என்னைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பேன்’ என்பது போன்ற சுயபரிசீலனைக் குரல்கள் ஒலிப்பது மிக அபூர்வமாக இருக்கிறது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் எவரும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. அவர்கள் நம்முடைய பிரதிநிதிகள்தான். நாம்தான் அவர்கள். நம்முடைய பிம்பங்கள். நம்முடைய கீழ்மைகள்தான் அவர்களின் வழியாக பிரதிபலித்து காமிராக்களில் அம்பலப்படுகின்றன. இது சார்ந்த சுயபரிசீலனைகளும் மேம்படுத்தல்களுமே இந்த நிகழ்ச்சியின் மீது நாம் செய்யும் நேர முதலீட்டின் மீதான நிகர லாபம். மற்றவர்களிடம் மட்டுமே குறை கண்டு, தீர்ப்பு எழுதி மனதிருப்தி கொள்வதின் மூலம் இந்த நிகழ்ச்சியை மேம்போக்காக கடந்து செல்வோம் எனில் நஷ்டம் நமக்கு மட்டுமே.

**

நேரடியாக அகம் டிவி வழியே வந்த கமல்,  வழக்கம் போல் மகிழ்ச்சியான தருணங்களின் மூலம் நிகழ்ச்சியைத் துவங்கினார். Blooper என்பது,  பதிவு செய்யப்படும் ஒரு நிகழ்ச்சியில் தனிநபர் செய்யும் தவறுகளின் கிண்டலான தொகுப்பு ஆகும். ஐம்பதுகளில் அமெரிக்கத் தொலைக்காட்சிகளின் மூலம் இது பிரபலமானது. Kermit Schafer என்கிற எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளரின் மூலம் இது புகழ்பெற்ற வடிவமானது. தம்முடைய படப்பிடிப்புகளில் நிகழ்ந்த தவறுகளை, பிரயத்தனங்களை ‘Unknown chaplin’ என்கிற தலைப்பில் ஒரு தொகுப்பாக சாப்ளின் உருவாக்கியிருந்ததை குறிப்பிட்ட கமல், பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒட்டியும் அப்படியொரு தொகுப்பு இருப்பதை அறிவித்து ஒளிபரப்பினார்.

பாலாஜி - வைஷ்ணவி

ஒரு போர்க்கை கொண்டு தம் செருப்பை வைஷ்ணவி சரிசெய்யும் காட்சியைக் கண்டு இதர போட்டியாளர்கள் அருவருப்புடன் சிரித்தார்கள். அந்தப் போர்க்கை எவருக்கும் தெரியாமல் சமையல் டிராயரில் அவர் போட்டதும் சிரிப்பின் அளவு உயர்ந்தது. வைஷ்ணவி பாத்திரத்தின் அடியில் இருந்த உணவை நக்கி சாப்பிடுவதை பாலாஜி அருவருப்பான முகத்துடன் பார்த்து கிண்டலடித்தார். (இதே பாலாஜியும் உணவருந்தும் போது தட்டில் இருப்பதை வழித்து நக்குவதை பல முறை நாம் பார்த்திருக்கிறோம்). நம் ஒவ்வொருவருக்குமே இம்மாதிரியான பழக்கங்கள் இருக்கின்றன. தன்னிச்சையாகவோ அல்லது அலட்சிய மனோபாவத்துடனோ செய்து விடுவோம். தனியறையில் செய்வது வரைக்கும் பிரச்னையில்லை. மற்றவர்கள் முன்பு அவர்கள் அருவருப்படையும் படி செய்வதுதான் பிரச்னை.

இது தொடர்பாக ஒரு பழைய சம்பவம் நினைவிற்கு வருகிறது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், தனது இளம் பருவத்தில் வெளிநாட்டில் இருக்கும் போது, இந்தியப் பழக்கத்தின் படி உணவை கையால் எடுத்து சாப்பிட்டாராம். இதை அருவருப்புடன் கவனித்த இதர வெள்ளைக்காரர்கள் விசாரித்த போது ராதாகிருஷ்ணன் அளித்த பதில் உன்னதமானது. “நீங்கள் பயன்படுத்தும் ஸ்பூன் மற்றும் ஸ்போர்க்குகளை மற்றவர்களும் பயன்படுத்துவார்கள். ஆனால் என் கைவிரல்களை நான் மட்டுமே பயன்படுத்த முடியும்”

ஒரு தியானத்திற்கான பொறுமையுடன் ஜனனி காய்கறி வெட்டும் காட்சி அற்புதமான பின்னணி இசையுடன் ஒளிபரப்பானது. கிடைத்த எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்து பொன்னம்பலம் சமையல் செய்யும் காட்சியும். “அந்தப் போர்க் என்னாச்சு?” என்று கமல் கிண்டலாக கேட்க, ‘ஏதோ ஞாபகத்துல டிராயர்ல போட்டேன்” என்று மழுப்ப முயன்றார் வைஷ்ணவி. ‘இப்படில்லாம் தெரிஞ்சிருந்தா நான் சாப்பிட்டிருக்க மாட்டேன்’ என்று பாவனையாக சென்றாயன் சொன்னதும் மும்தாஜின் முகம் போன போக்கை காண ஆயிரம் கண்கள் வேண்டும். ‘பசி வந்தால் பத்தும் பறக்கும்.. பத்து தேய்க்கறது கூட’ என்று கிண்டல் அடித்தார் கமல்.

சமையல் செய்யும் பொறுப்பு சென்றாயனிடம் இதுவரை வழங்கப்படாததிற்குப் பின்னுள்ள கலாசார அரசியலைப் பற்றி இந்தத் தொடரில் பல முறை குறிப்பிட்டிருக்கிறோம். இந்தப் பழைய கணக்கை தூசி தட்டி எடுத்தார் கமல். ‘ சென்றாயனை சமையல் டீமில் சேர்த்துக்கங்க” என்று கமல் சொல்லி முடிக்கும் முன்னரே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் மும்தாஜ்.

“அவருக்கு பேசி புரிய வெக்க முடியாது’ என்பது மும்தாஜ் சொல்லும் மேலோட்டமான காரணம். “வெங்காயம், தக்காளி வெட்டறதுக்கு என்ன புரிய வேண்டியிருக்கு?” என்று அடிபட்ட உணர்வுடன் சென்றாயன் கேட்டது சரியான கேள்வி. “பாத்தீங்களா.. இப்படி சத்தமா பேசறது எனக்குப் பிடிக்கலை. இது சரியா வராது” என்று சென்றாயனை மறுபடியும் தவிர்க்க முயன்றார் மும்தாஜ். ‘எனக்கு ரெண்டு பேர் குரலும் ஒரே மாதிரிதான் கேட்குது” என்று கமல் சூசகமாக குறிப்பிட்டாலும் மும்தாஜிற்கு தன் தவறு உறைக்கவில்லை.

போட்டியாளர்கள்

“வேறு யார்.. சென்றாயனுக்கு புரியும் படி பேச முடியும்?” என்றதும் டேனி உள்ளிட்ட சிலர் கைதூக்கினர். ‘அவர் ஏற்கெனவே சமையல் டீம்ல உதவியிருக்கார். சிலது செஞ்சிருக்கார். நல்லாத்தான் செஞ்சார்’ என்றனர். ஆக.. அதுவல்ல பிரச்னை.

‘யாராவது ஒருத்தர் சென்றாயனுக்கு  மொழிபெயர்த்து உதவுங்க.. ஹைஜீன் ஒண்ணும் அற்புதக்கலை இல்லை. முயற்சித்தால் வந்துடும். மும்தாஜே கண்ணீர் விடும்படி சிறப்பா செஞ்சிடுங்க.. என்ன?” என்று சமையல் டீமில் சென்றாயனை இணைப்பதை கட்டாயமாக்கினார் கமல். அவர் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்வதெல்லாம் மும்தாஜிற்கான குறிப்புகள்தான். ஆனால் அவருக்கு இவை எத்தனை தூரத்திற்கு புரிகின்றன என்று தெரியவில்லை.

அடுத்தது பொன்னம்பலத்தின் கேஸ் கட்டைப் பிரித்தார் கமல். பொன்னலம்பலத்திற்கு சாதகமாகவே கமல் இதுவரை பேசியிருக்கிறார் என்கிற சந்தேகம் பொதுவாக இருந்தது. அது அப்படியல்ல என்பது இன்று தெளிவாகியது. தமிழ்நாடு, கலாசாரம் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொன்னம்பலத்திடம் ‘கலாசாரம்’ தொடர்பாக பேச ஆரம்பித்தார்.

‘தமிழகம் என்பது ஒரு தகுதி கிடையாது அது ஒரு விலாசம் மட்டுமே. தமிழகத்தில் கால் வைப்பது பிரச்னையில்லை. கால் வைத்து விட்ட பிறகு என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். திறமையுள்ளவர்களை தமிழகம் வாழ வைக்கும். தமிழகம் மட்டுமல்ல, உலகமும் அப்படித்தான்” என்கிற முகவுரையுடன் பொன்னம்பலத்தின் கலாசாரம் பற்றிய விளக்கத்தைக் கேட்டார் கமல்.

‘இடம், பொருள், ஏவல்’ன்னுல்லாம் இருக்கு சார். வாழப் போகும் இடம், சுற்றத்தார் என்ன விரும்புகிறார்கள், தமிழ் மக்களை கவர வேண்டும். பொங்கல் ஆடை, விருந்து ஆடை என்று சில பழமைவாத அபிப்ராயங்களை பொன்னம்பலம் கூறினார்.

“விளம்பரப் படங்களில் வரும் ஆடை வித்தியாசங்கள் எல்லாம் போலித்தனமானவை” என்று துவங்கிய கமல், 28 வயதிலேயே விதவையாகி விட்ட தன் பாட்டியைப் பற்றி பேசினார். சிறுவன் கமல் பள்ளிக்கு கிளம்பும் போது எதிரே வருவதை தவிர்ப்பாராம் பாட்டி. ஆனால், அதே மாதிரியான விதவையொருவர் (இந்திரா காந்தி) ஐ.நா சபையில் பேசிக் கொண்டிருந்த கலாசார முரணை சுட்டிக் காட்டினார். ‘ஒருவருக்கு கொடுத்ததை இன்னொருவருக்கு தர மறுக்கிறோம்’.

பொன்னம்பலம் - பிக் பாஸ்

பொன்னம்பலம் தொடர்பான ஒரு ‘குறும்படம்’ ஒளிபரப்பானது. ‘ஐஸ்வர்யாவின் கால் என் மீது படுகிறது’ என்று முன்னர் புகார் தந்த பொன்னம்பலம், ஒரு விளையாட்டுப் போட்டியின் போது யாஷிகாவின் மீது அப்படியே சாய்ந்து விடுவதும், ரித்விகாவை எட்டி உதைப்பதுமான காட்சிகள்.

ஆனால் இவை வலுவான சாட்சியங்கள் அல்ல. விளையாட்டுப் போட்டிகளில் இவ்வாறு நிகழ்வது சகஜம்தான். அதிலும் ‘எந்த உத்தியையும் கையாளலாம்’ என்று பிக்பாஸ் அறிவித்து விட்ட பிறகு அதை விமர்சனத்திற்கு உட்படுத்த முடியாது. அதை திட்டமிட்டு பொன்னம்பலம் நிகழ்த்தியிருக்காமலும் போயிருக்கலாம். இதன் ‘சந்தேக பலன்களை’ பொன்னம்பலத்திற்கு அளித்தாக வேண்டும். மாறாக அவர் பெண்கள் குறித்து இழிவாக பேசும் காட்சிகளை ஒளிபரப்பியிருக்கலாம். ‘பொம்பளை வேஷத்துல இருக்கும் ஆம்பளை’ என்று வைஷ்ணவியை ஒரு முறை குறிப்பிட்டதை வைஷ்ணவியே தெரிவித்திருக்கிறார்.

பொன்னம்பலத்தின் இந்தப் பிரச்னையைப் பற்றி மற்றவர்களின் கருத்தைக் கேட்டறிந்தார் கமல். ‘அவருக்கு வயது, அனுபவம்லாம் இருக்கு. இளையவர்களின் பிரச்னைகளைப் பற்றி தனியாக கூப்பிட்டு பேசுங்கள் என்று நானும் சில முறை சொல்லியிருக்கிறேன்’ என்றார் மும்தாஜ். ‘இதுவரைக்கும் என் கிட்ட பிரச்னையில்லை சார். இப்படி உட்காரு.. அப்படி உட்காரு –ன்னுல்லாம் சொன்னதில்லை. ஆனா டாஸ்க்ல அஞ்சு விஷயம் இருக்குன்னா.. ஆறாவதா ஒண்ணை செஞ்சிடுவார்” என்றார் ரித்விகா.

சர்ச்சையில் சம்பந்தப்பட்ட யாஷிகாவும் சாட்சியம் அளித்தார். ‘ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்’-ன்னு ஒண்ணு இருக்கு. அதனால எனக்கு பிரச்னையில்லை. ஆனால் ஆடை உடுத்தும் விதத்தை வைத்து ஒரு பெண்ணை மதிப்பிடாதீர்கள்’ என்றார்.

“கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு, பெண்கள் ஜாக்கெட் அணிய முடியாது. அந்தப் பொம்பளைங்க என் கண்ணுக்கு அழகாத்தான் தெரிஞ்சாங்க.. பெண்களுக்கு தனியா ஒண்ணு இருக்கணும்ன்றதுல எனக்கு விருப்பமில்லை. ‘ஊருக்குத்தான் உபதேசம்-னு நெனச்சீங்கன்னா.. என் ரெண்டு பொண்ணுங்க கிட்ட கேட்டுப் பாருங்க.. சொல்லித் திருத்தலாம்… அப்படித்தான் பண்ணுவேன்னா.. அவங்களா திருந்தணும்.. சொல்ல வேண்டியது என் கடமை. யாஷிகா வைப் பார்த்தா ஸ்ருதி மாதிரி மாதிரிதான் தெரியுது. மனதில் தவறு இல்லையென்றால் எதுவும் பிரச்னையில்லை. ‘’Beauty is in the eye of the beholder” என்றார் கமல்.

அடுத்ததாக எவிக்ஷன் விவகாரத்திற்கு வந்தார் கமல். யாஷிகா, மஹத், பொன்னம்பலம், வைஷ்ணவி மற்றும் மும்தாஜ் ஆகியோர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள்.

பொன்னம்பலம்- மஹத் - யாஷிகா - மும்தாஜ் - வைஷ்ணவி

‘எதுக்கு இழுப்பானேன்.. யாஷி்கா நீங்க safe’ என்று உடனே அறிவித்து விட்டார் கமல். “சொல்லுங்க மஹத்..” என்றவுடன் ‘நான் போக மாட்டேன்னு நெனக்கறேன்’ என்று தன்னம்பிக்கையுடன் சொன்னார் மஹத். ‘எந்தத் தீர்ப்பு என்றாலும் என்றாலும் ஓகே” என்பது போல் சொன்னார்கள் மும்தாஜூம் வைஷ்ணவியும். ‘நான் மக்களுக்கு ரெகுலர் கஸ்டமர் ஆயிட்டேன்’ என்று சொல்லி நகைக்க வைத்தார் பொன்னம்பலம்.

‘இந்த வீட்டில் யார் இன்னமும் தங்க விரும்புகிறீர்கள்?” என்றதற்கு “இங்கயும் எனக்கு பிரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க. வெளிலயும் இருக்காங்க.. ஐஸ்வர்யா எனக்கு பிடிச்ச பிரெண்ட். இங்க இருக்க விரும்புகிறேன்” என்று யாஷிகா சொன்னதின் மூலம் விரிசல் அடைந்த நட்பு மீண்டும் ஒட்டிக் கொண்டதை உணர முடிந்தது. “மஹத் போனா என்ன நெனப்பீங்க?” என்று இன்னொரு தூண்டிலை கமல் யாஷிகாவிடம் வீச.. ‘மஹத் good hearted person. அவன் ஒண்ணும் தப்பு பண்ணலை. மக்கள் நம்புவாங்க. சட்டுன்னு கோபப்படுவான். அவ்வளவுதான்” என்றதும் “அப்ப ஒருத்தர காப்பாத்தலாம்” என்று இழுத்த கமல்.. ‘மஹத்தை’ சொல்லப் போகிறார் என்று நாம் நினைக்கும் போது சட்டென்று ‘பொன்னம்பலம் safe’ என்று பொன்னம்பலத்தை அதிர வைத்தார். ஆக.. கரணம் தப்பினால் மரணம் விளையாட்டை பொன்னம்பலம் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

“மஹத்.. நீங்க வெளியே போகறதா இருந்தா என்ன நெனப்பீங்க” என்றதும் ‘எல்லாம் கடவுள் என்ன நெனக்கறார்-ன்றதைப் பொறுத்துதான்.” என்றார் மஹத். (சிறையில் களி தந்த ஞானம்!). ‘அப்படியா… என்ன கடவுள் சொல்றீங்க?” என்று காலையாட்டிக் கொண்டே ஜாலியாக கேட்டார் கமல். பிறகு சற்று இழுத்து விட்டு .. ‘ரொம்ப போரடிக்குதே… சொல்லிடுவோம்’ என்று அதிரடியாக வைஷ்ணவியின் பெயரை அறிவிக்க வைஷ்ணவியால் நம்ப முடியாமல் தயங்கி எழுந்தார். ‘பொய் சொல்லலை. பாருங்க.. என்று கமல் பெயரைக் காட்டிய பிறகே உறுதியாக எழுந்த வைஷ்ணவி.. “போறேன்ல.. கண்கலங்குங்களேன்’ என்கிற தோரணையில் ஒவ்வொருவரையும் கட்டியணைத்துக் கொண்டார். சென்றாயன் சற்று கலங்க, பாலாஜி இறுக்கத்துடன் காணப்பட்டார்.

“என்னைத் தான் டார்ச்சர் பண்ணீங்க.. செடியை டார்ச்சர் செய்யாம பத்திரமா வளருங்க” என்கிற சர்காஸ குறிப்புடன் செடியை டேனிக்கு பரிசளித்தார் வைஷ்ணவி. சர்ச்சைக்குரியவர்களை  விட்டு விட்டு ஒவ்வொரு வாரமும் பலியாடுகளை பிரியாணி போடுவதே பிக்பாஸின் வேலையாக இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே இதில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது.

அதன் படி, வைஷ்ணவி வெளியேற்ப்படவில்லை. ஒரு ரகசிய அறையில் தங்க வைக்கப்படுவார். பிக்பாஸ் வீட்டின் இயக்கங்களை அவரால் காண முடியும். (கடந்த சீஸனில் சுஜா இது போல் அமர வைக்கப்பட்டார்). ‘சுயபரிசீலனைக்கான தருணம்’ என்று வர்ணித்தார் கமல்.

வைஷ்ணவி

வைஷ்ணவி வெளியேற்றப்பட்டுவிட்டார் என்கிற எண்ணத்துடன் அமர்ந்திருந்த இதர போட்டியாளர்களிடம் பேசினார் கமல். “குடும்பம் இன்னமும் சுருங்கிடுச்சு.. எப்படியிருக்கு உங்க மனநிலை..?” என்றவுடன் ‘துறுதுறுன்னு சுத்திட்டு இருக்கும்.. இப்ப யாரைக் கலாய்க்கறதுன்னு தெரியாம தவிக்கிறோம்’ என்றார் மஹத். “இங்க ஒண்ணு.. அங்க ஒண்ணூன்னு மாத்தி மாத்தி பேசுவாங்க’ என்றார் ஷாரிக். “அவங்க கண்ல எப்பவும் உண்மையான புன்னகை தெரியாது. அன்னிக்கு என் சமையல் பிடிச்சப்ப அவங்க தந்த hug மட்டுமே உண்மையாக இருந்தது. God bless her’ என்றார் மும்தாஜ்.

‘முதல்ல பிரெண்டா இருந்தோம். அப்புறம் பேசிக்காம இருந்தோம். என்னைப் பத்தி நிச்சயம் ஏதாவது சொல்லியிருப்பாங்க’ என்றார் டேனி. “அவங்களை நாமினேட் செஞ்சது பத்தி கில்ட்டியா இருக்கு. ‘அண்ணே…நான் என்ன பண்ணேன்?’ன்னு விசாரிச்சாங்க” என்று கலங்கினார் சென்றாயன்.

“யாரைப் பத்தியும் சொல்லியிருக்க மாட்டாங்க.. உள்ளுக்குள் என்ன சண்டை நடந்தாலும் உடனே பிரெண்டாயிடுவாங்க.. அவங்க யாரைப் பத்தியும் குற்றம் சொல்ல சான்ஸே இல்லை” என்று பொன்னம்பலம் அழுத்தம் திருத்தமாக சொன்னதும் ரகசிய அறையில் இதைக் கவனித்துக் கொண்டிருந்த வைஷ்ணவி ‘தெய்வமே’ என்று கண்கலங்கினார். ‘என்னைப் பத்தி தவறா சொல்லியிருக்க மாட்டாங்க.. மனசுல எதையும் வெச்சுக்க மாட்டாங்க’ என்ற ரித்விகாவையும் பாசத்தோடு பார்த்தார் வைஷ்ணவி. “நான் கூட அவங்களை கிண்டல் செஞ்சு பேசியிருக்கேன். படபடன்னு பேசுவாங்களே தவிர மனசுல எதையும் வெச்சுக்க மாட்டாங்க’ என்றார் பாலாஜி.

“போன வாரம்தான் அவங்களுக்கு ‘ஜால்ரா’ன்னு பட்டம் கொடுத்தீங்க.. ஆக.. தள்ளியிருந்தாத்தான் ஒருத்தரோட அருமை தெரியுதில்லையா?” என்று சரியாக சுட்டிக் காட்டினார் கமல். “இப்படியொரு புறம் பேசுகிற காரெக்ட்டர் போயிட்டா நல்லது –ன்னு கூட நெறய பேர் நெனச்சிருக்கலாம்.. நானும் கூட நெனச்சிருக்கலாம்.. போட்டியும் குறையும்’ என்று பாலாஜி வெளிப்படையாக சொன்னதைக் கேட்டு கமல் புன்னகைத்தார். ‘நான் கண்டிப்பா மிஸ் பண்ணுவேன் சார்.. பக்கத்து பெட். நெறைய விஷயம் பேசியிருக்கோம். அவ செய்யற தவறுகளை உரிமையா திட்டியிருக்கேன்’ என்றார் ஜனனி. ‘பாலாஜி.. இது உண்மையா?” என்று கமல் விசாரித்ததும் .. ‘எனக்கென்னமோ சரியாப்படலை’ என்று பாலாஜி சொன்னதும் மறுபடியும் மர்மப்புன்னகையை வீசினார் கமல்.

கமல்

“குடும்பன்ற வார்த்தை கேட்கறதுக்கு நல்லா இருக்கு. ஆனா இது ஒரு கேம் ஷோ. குடும்பமா இருக்க முடியாது. நல்லாப் பழகிட்டு அடுத்த நிமிஷம் உள்ளே போய் நாமினேஷன் பண்றாங்க.. அவங்களுக்கு சாய்ஸூம் இல்லதான். இங்க நிச்சயம் புறம் பேசறாங்க.. அது மட்டும் இல்லாம பார்த்துக்கிட்டா நல்லாயிருக்கும்’ என்று வெளிப்படையாக பேசினார் மும்தாஜ். “பிடிக்காதவங்க கிட்ட இருந்து விலகியிருக்கணும்ன்றது. என் பாலிசி’ என்றார் மஹத். “இந்த வீட்ல என்னையும் தொடர்ந்து நாமினேட் பண்றாங்க.. எதுக்குன்னே புரியலை” என்று புலம்பினார் பொன்னம்பலம்.

அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்ட கமல், பிறகு ரகசிய அறையில் இருந்த வைஷ்ணவியிடம் பேசினார். ‘எனக்கு பைத்தியம் பிடிக்கும் போல இருக்கு” என்றார் வைஷ்ணவி. ‘என்னைப் பற்றி பல்வேறு அபிப்ராயங்கள் வந்தன. அதுல உண்மையும் இருக்கு. பொய்யும் இருக்கு. புறம் பேசறதா என்னைச் சொல்றாங்க.. உண்மைதான். ஆனா அங்க புறம் பேசாதவங்களே கிடையாது” என்றார் வைஷ்ணவி.

“இந்த மாதிரி தனியறைகள் எல்லோருடைய லைஃப்லயும் இருக்கு. நெறய பேர் அதை யூஸ் பண்ணிக்கறதில்லை. பாருங்க.. உங்களுக்கு பைத்தியம் பிடிக்கலாம் அல்லது உங்களையே உங்களுக்கு  பிடிக்கலாம்’ என்ற படி விடைபெற்றார் கமல்.

வீட்டிற்குள் போட்டியாளர்கள் பேசிக் கொண்ட காட்சிகள் ஒளிபரப்பாகின. ‘நான் நமாஸ் படிக்கும் போது அமைதியா இருக்கற மாதிரி எப்பவும் இருந்தா நல்லாயிருக்கும்னு சொன்னீங்களே.. என்னது அது.. புரியல.. நான் உங்க கிட்ட அப்படி சத்தமா பேசியிருக்கேனா” என்று பொன்னம்பலத்திடம் விசாரித்தார் மும்தாஜ். “பொதுவாகவே அமைதியாதான் இருந்து பாருங்களேன்.. அதுல ஒரு சந்தோஷம் இருக்கு” என்று பொன்னம்பலம் முதிர்ச்சியாக சொன்னது மும்தாஜூக்குப் புரியவில்லை. “நீ்ங்க ஒரு முறை என்னைத் திட்டினப்ப கூட நான் அமைதியாத்தான் இருந்தேன்” என்றார். ‘அப்ப உங்க சைட்ல மிஸ்டேக் இருந்தது. எனக்குப் பிடிக்காத விஷயங்களில் கட்டாயப்படுத்தாதீங்க. புரிஞ்சுக்கிட்டு ஒதுங்கிடுங்க” என்றார் பொன்னம்பலம். மும்தாஜின் இப்போதைய விசுவாசியான பாலாஜியும் மும்தாஜிற்கு ஆதரவாக எதையோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டார்.

வைஷ்ணவி

“வைஷ்ணவி போறதுக்குள்ளே எல்லோரும் சாப்பிட உக்காந்துட்டீங்களே” என்று சென்றாயனிடம் பொங்கினார் பாலாஜி.. “அந்தப் பொண்ணு திரும்பி வந்ததுன்னா.. எல்லோருக்கும் இருக்கு” என்ற பாலாஜியின் உள்ளுணர்வு சரியாகவே வேலை செய்தது போல. இதைக் கேட்டுக் கொண்டிருந்த வைஷ்ணவி சிரித்துக் கொண்டார்.

சென்றாயனின் சமையல் பொறுப்பு பிரச்னை மறுபடியும் ஆரம்பித்தது. ‘யாராவது அவருக்கு புரிய வெக்கறவங்க. சமையல் டீமிற்கு வாங்க” என்று மும்தாஜ் பாலாஜியை அழைத்தார். மறுபடியும் அடிபட்ட உணர்வை அடைந்த சென்றாயன் ‘எனக்கு என்ன புரியலைன்றீங்க” என்று கோபப்பட ‘இதான் பிடிக்கலை’ என்றார் மும்தாஜ். ‘சரி. அவங்கங்க கிட்ட இருக்கற பிரச்னைகளை மாத்திப்போம்’ என்று அரைமனதுடன் சமாதானம் ஆனார்கள். “என் கிட்ட என்ன மைனஸ் இருக்குன்னு யோசிச்சு சொல்லுங்க. அப்புறம் சமையல் ஆரம்பிக்கலாம்’ என்று தன் கெத்தை விடாமல் பேசினார்  மும்தாஜ்.

சென்றாயன் சமையல் டீமில் இணைக்கப்பட்டது தொடர்பான தன் அதிருப்தியையும் எரிச்சலையும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் மும்தாஜ். ‘வெஸல் வாஷிங் மாதிரி சமையல் விஷயம் கிடையாது. இது ரத்த பூமி.. அவர் கிட்ட சொல்லி வைங்க’ என்று பாலாஜியிடம் தன் எரிச்சலை காட்டிக் கொண்டிருந்தார். சென்றாயன் பேசுவது போலவே இழுவையுடன் மும்தாஜ் பேசிக் காட்டியது அவர் மனதில் இருந்த புகைச்சலை வெளிப்படையாக காட்டியது.

ஆடைகள் வைக்கும் இழுப்பறைக்குள் புகுந்து கொண்டு விளையாட்டு காட்டினார் ஜனனி. இந்த விளையாட்டை மற்றவர்களுக்கும் தொடர்ந்தார்கள். பாலாஜி இதை யூகித்து விட்டாலும் உள்ளே ஓர் உடலைப் பார்த்ததும் தன்னிச்சையாக பயந்து விட்டார். போலவே டேனியும். ‘இல்லையே.. நான் பயப்படலையே..’ என்று அநாவசிய கெத்து காட்டினார் பொன்னம்பலம். பிக்பாஸ் வீட்டில் மீண்டும் சிரிப்பொலிகள் கேட்டன. (இதே விளையாட்டை அடுத்த டாஸ்குகளில் பிக்பாஸ் காப்பியடிக்ககூடும்).

வைஷ்ணவி

இரவு நடையின் போது பாலாஜியைப் பற்றி டேனியிடம் புறம் பேசிக் கொண்டிருந்தார் சென்றாயன். “பாலாஜி முன்ன மும்தாஜிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இப்ப சட்டுன்னு அவங்க கூட ஒண்ணாயிட்டாரு. நீ கூட அவங்க கூட போன வாரம் ஒண்ணா இருந்தியே” என்று டேனியையும் சுட்டினார். “ஆமாம்.. அப்ப என்னை மத்தவங்க ஒதுக்கிட்டாங்க.. அவங்கதான் தனியா இருந்தாங்க.. அதான் அவங்க கிட்ட பேசிட்டு இருந்தேன்” என்றார் டேனி.

சென்றாயனை மறுபடியும் வெறுப்பேற்றத் துவங்கினார் மும்தாஜ். ‘அண்ணா.. இதுதான் உங்களுக்கு லாஸ்ட் மீல்.. இனிமே மத்தவங்க சாப்பிட்ட அப்புறம்தான் நாம சாப்பிடணும். இதுதான் குக்கிங் டீமோட ரூல்’ என்று மும்தாஜ் பயமுறுத்தியதும் ‘ஐய்யய்யோ.. எனக்குல்லாம் பசி தாங்காதுங்க.. நான் சாப்பிட்ருவேன்’ என்று அலறினார் சென்றாயன். “இதையெல்லாம் கமல் சார் முன்னால ஏன் சொல்லலை. வேற என்னெல்லாம் உங்களால பண்ண முடியாது. சொல்லிடுங்க” என்று மும்தாஜ் தன் ஏழரையைத் துவங்கியதும்.. அங்கிருந்து எதுவும் சொல்லாமல் நகர்ந்தார் சென்றாயன். ‘பார்த்தீங்களா. Cheaper.. இவர் கிட்ட எப்படி பேசறது?” என்று பாலாஜியிடம் மும்தாஜ் அனத்த, ‘ஏன் எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க.. இவனையெல்லாம் பெரிய ஆளாக்கிடாதீங்க” என்றார் சென்றாயனின் ‘உயிர்’ நண்பனான பாலாஜி. (உங்களின் நம்பகமான நண்பனும் உங்களைப் பற்றி புறம் பேசுவான் என்பது இதனால் அறியப்படும் நீதி). மும்தாஜ் எதிரே தன்னிச்சையாக தன் மூக்கை நோண்டத் துவங்கிய பாலாஜி, சட்டென்று சுதாரித்துக் கொண்டு முகத்தை துடைத்துக் கொண்ட அந்த பவ்யம் பார்க்க நகைச்சுவையாக இருந்தது.

“சமையல் டீம்ல இருக்கறவங்க கடைசிலதான் சாப்பிடணும்னு எந்த ரூலும் கிடையாது. உனக்குப் பசிக்குதுன்னா சாப்பிடு’ என்று சென்றாயனுக்கு தைரியம் சொன்னார்கள் ஜனனியும் டேனியும், ஷாரிக்கும். “இப்ப பாருங்க.. சென்றாயன் டேனி கிட்ட போய் சொல்லுவார்:” என்று சரியாக யூகித்துச் சொன்னார் ரித்விகா. விளக்குகள் அணைய, ‘எப்பப்பாரு.. இருட்ல என்னை சாப்பிட வெக்கறீங்களே!” என்று மும்தாஜ் புலம்புவதோடு அன்றைய நாள் முடிந்தது. (அதனால்தான் சென்றாயன் முன்பே சாப்பிட்டு விட்டார்!).

உணவு தீர்ந்து மற்றவர்களுக்கு இல்லாமல் போய் விடக்கூடாது என்பது சமையல் செய்பவர்களின் பொதுவான கவலை. எனவே அவர்கள் கடைசியாக சாப்பிடுவது என்பது ஒரு நல்ல கலாசாரம்தான். ஆனால் இது ஒரு கட்டாயமான விதியல்ல. பசிக்குத்தான் உணவு. சமையல் அணியிலிருந்து சென்றாயனை எப்படியாவது துரத்தி விட வேண்டும் என்பதற்காக துவக்கத்திலிருந்தே பல உபாயங்களை மும்தாஜ் ஆரம்பித்திருப்பது வன்மம். ஏனெனில் சமையல் அறையும் ஓர் அதிகாரம். அந்த இடத்தைக் கைப்பற்றுவதில் மும்தாஜ் துவக்கத்தில் இருந்தே கவனமாக இருக்கிறார். தனக்குப் பிடிக்காதவர்கள் அங்கு வரக்கூடாது என்பதிலும். டேனியை அவர் சகித்துக் கொள்வது கூட, அவர் பலமான போட்டியாளர் என்பதாலேயே.

சென்றாயன் - டேனியல் - மும்தாஜ்

பொன்னம்பலம் குறிப்பிடுவது போல, மும்தாஜ் தன் நல்லியல்புகளை இன்னமும் பரவலாக்கிக் கொண்டால் கீழ்மைகளின் கடுமை தன்னாலேயே குறையும். இது மும்தாஜிற்கான நீதி மட்டுமல்ல. நமக்குமானதும் கூட.