பிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா? – ராகுலுக்கு பதிலடி கொடுத்து என்ன பேசினார் மோடி?

நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் குறித்து காங்கிரஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகளுக்கு, பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

மோடி

நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் நேற்று (20-ம் தேதி) நடைபெற்றது. இதில், முன்னதாக உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பி.ஜே.பி. அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். பின்னர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டிப்பிடித்தார். இதைத் தொடர்ந்து தீர்மானம் மீதான விவாதங்கள் குறித்து பதிலளித்துப் பேசினார் மோடி.“நிறையப் பேர் பிரதமராக வேண்டும் என நினைக்கின்றனர். என்னைப் பிரதமர் பதவியில் 125 கோடி மக்கள் அமரச் செய்தனர். எதிர்க் கட்சிகள் எதிர்மறை அரசியல் செய்கின்றன; அதிகாரப் பசி காரணமாக எதிர்க் கட்சிகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன; நாட்டுக்கு வளர்ச்சி வேண்டாம் என எதிர்க் கட்சிகள் நினைக்கின்றன; நாட்டு மக்களை எதிர்க்கட்சிகள் குழப்புகின்றன. நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். எங்கள் ஆட்சியில் பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் 8 கோடி கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. ஜன்தன் திட்டம் மூலம் ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த 70 ஆண்டுகளாக இருளில் இருந்த 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி பலமுறை நாட்டை நிலையற்ற தன்மைக்குத் தள்ளியுள்ளது; அரசியல் குழப்பத்தை உண்டாக்கி லாபமடைவது அக்கட்சியின் வழக்கம். வாஜ்பாய் அரசைக் கவிழ்த்து மக்கள் மீது காங்கிரஸ் தேர்தலைத் திணித்தது; தேவகெளடா, ஐ.கே.குஜ்ரால், முலாயம் சிங் உள்ளிட்டவர்களைக் காங்கிரஸ் அவமதித்துள்ளது; தேர்தல் ஆணையம், நீதித்துறை, ஆர்.டி.ஐ. மீது காங்கிரஸ் நம்பிக்கை இழந்துள்ளது. நான், ஓர் ஏழை என்பதால் ராகுலின் கண்ணைப் பார்த்துப் பேச எனக்குத் தைரியமில்லை.ராகுல் காந்தி கண்ணடித்ததை இன்று நாடே பார்த்திருக்கிறது. நாங்கள் நாட்டைப் பாதுகாப்பவர்கள்… காங்கிரஸ் கட்சியினர் நாட்டை விற்பவர்கள். குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக நாட்டின் எதிர்காலத்தைக் காங்கிரஸ் வீணடித்துவிட்டது. பிரதமர் இருக்கைக்கு வர அவ்வளவு அவசரமா” என்று தன்னைக் கட்டிப்பிடித்தது குறித்து ராகுல் காந்தியைக் கேலியாகப் பேசிய மோடி, உரையில் பல முக்கியமான அம்சங்களை எடுத்துவைத்தார்.

அவர் ஆற்றிய உரையில், “ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றது. ஆந்திராவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்; ஆந்திர மக்களின் முன்னேற்றதுக்காகப் பாடுபடுவதிலிருந்து மத்திய அரசு ஒருபோதும் பின்வாங்காது. மாநில அரசுகளின் கருத்தைக் கேட்க காங்கிரஸ் மறுத்தது; ஆனால், அனைத்து மாநில முதல்வர்களோடு கலந்துபேசி ஒருமனதாக ஜி.எஸ்.டி. கொண்டுவரப்பட்டது. 2009-2014-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளிலிருந்து கொள்ளையடித்தது. வங்கித் துறைகளில் பல சீர்த்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது; இதனால், அரசுக்கு வரவேண்டிய பல வரிப் பணம் வந்துகொண்டிருக்கிறது. கறுப்புப் பணத்தை ஒழிக்க பி.ஜே.பி. அரசு தொடர்ந்து போராடி வருகிறது. வங்கிகளின் வளர்ச்சிக்காக 2.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பணத்தைக் கொள்ளையடிப்பவர்களைத் தடுப்பதற்காக நேற்று முன்தினம்கூடச் சட்டம் இயற்றப்பட்டது. பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் நிறைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபிறகு, காங்கிரஸ் கட்சி வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கடனை அடைத்திருக்கிறது. காந்தியின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. உடனடியாக முத்தலாக் முறையைத் தடுத்து நிறுத்தி முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, கடந்த ஓர் ஆண்டில் போக்குவரத்துத் துறையில் 1 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது” என முக்கிய அம்சங்கள் பலவற்றை மோடி குறிப்பிட்டார்.