நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு! யாழ். மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு

மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியல் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரை மேலும் ஒரு வருடம் விளக்கமறியலில் வைக்கவும், இவ்வழக்கு தொடர்பான நீதிவான் நீதிமன்ற “பி” அறிக்கை என்பவற்றை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

1997ஆம் ஆண்டு பிணைச்சட்டம் பிரிவு 16இன் கீழ் ஒருவரை ஒருவருடத்திற்கு மாத்திரமே விளக்கமறியலில் வைக்க முடியும். அதற்கு மேல் விளக்கமறியலில் வைக்க வேண்டுமானால் சட்டமா அதிபரே மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அந்த வகையில், நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும், 23ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது.

அந்த வகையில் நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்குறிப்பிட்ட சட்ட விதிகளுக்கு அமைய சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் மேல் நீதிமன்றில் முன்னலையாகி குறித்த நபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்குமாறு விண்ணப்பம் செய்திருந்தார்.

மேலும், குறித்த வழக்கு விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும், இவர்களை வெளியில் விட்டால் சாட்சிகளுக்கு ஆபத்து ஏற்படும் எனவும், இவர்கள் தலைமறைவாகக் கூடும் எனவும் அரச சட்டவாதி தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மன்று, இவ்வழக்கு தொடர்பான “பி” அறிக்கை மற்றும், நீதிவான் நீதிமன்ற அறிக்கைகளையும், மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு அரச சட்டவாதிக்கு உத்தரவிட்டதுடன், இந்த வழக்கை எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைத்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் 22ஆம் திகதி யாழ். நல்லூர் ஆலயத்தின் வடக்கு வீதியில் , முன்னாள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்ததுடன், இந்த சம்பவத்தில் மூவர் சந்தேகத்தின் பெரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.