வடகொரியா அணு ஆயுதங்களை அழிப்பதற்கு எந்தவொரு கால எல்லையும் வகுக்கப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் அவசரம் காட்ட வேண்டிய தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.
வடகொரியாவின் அணு ஆயுத அழிப்பு நடவடிக்கை மிகவும் துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், தனது கருத்தை தற்போது அவர் மாற்றியுள்ளார்.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு கடந்த மாதம் நடைபெற்றிருந்தது.
இந்த சந்திப்பின் போது கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை ஒழிப்பதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உறுதி வழங்கியிருந்தார்.
எனினும் இந்த அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்திற்கு கால அளவு அல்லது திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.






