பிரித்தானியா மகாராணியின் கணவரே செய்ய பயப்படும் செயலை பகிரங்கமாக செய்த டிரம்ப்: ஆத்திரத்தில் மக்கள்

பிரித்தானியா வந்த டிரம்ப்பிற்கு பாதுகாப்பு படையினர் மரியாதை செலுத்திய போது, அவர் மகாராணியை முந்திக் கொண்டு நடந்து சென்றது அந்நாட்டு மக்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியான பின்பு முதல் முறையாக டிரம்ப் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக பிரித்தானியா சென்றிருந்தார். டிரம்ப் எங்கு சென்றாலும், அங்கு ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கிவிடுவார்.

அப்படி தான் பிரித்தானியா சென்ற போதும், ஒரு சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர், பிரித்தானியாவின் பக்கிங்ஹாம் அரண்மனையில் மகாராணி எலிசபெத்தை சந்தித்தனர்.

அங்கு பாதுகாப்பு படையினர் டிரம்புக்கு மரியாதை செலுத்தினர். அப்போது பாதுகாவலர்கள் அணிவகுத்து நிற்க, தலைவர்கள் நடந்து செல்ல வேண்டும்.

இந்த மரியாதையின் போது மகாராணி தான் முன்னே நடந்து செல்ல வேண்டும். ஆனால் டிரம்போ எதையும் கண்டு கொள்ளாமல் முன்னே நடந்து சென்றார்.

அப்போது ராணி இடது பக்கமாக வாருங்கள் என செய்கை செய்த போதும் அது டிரம்புக்கு புரியவில்லை. டிரம்பின் இந்த செயல் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

மேலும் ராணி நடந்து செல்லும்போது அவரது கணவர் பிலிப் கூட ஒரு அடி பின்னே நடந்து சென்றது தான் வழக்கம். ஆனால் டிரம்ப் முதன்முறையாக அவரையே முந்திக் கொண்டு நடந்தது அந்நாட்டு மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராணியை சந்திப்பதற்காக டிரம்ப் 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால், ராணி எலிசபெத் 10 நிமிடங்கள் வெயிலில் காத்திருந்து அவரை வரவேற்றது கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.