புதையலை காத்த முதலைகள்: தொட முயற்சித்தால் மரணம் நிச்சயம்

மன்னர் ஆட்சி காலங்களின் போது சேகரிக்கப்பட்ட தங்கம், விலை உயர்ந்த ஆபரணங்களை கிணறுகள், சுரங்கம், ரகசிய இடங்களில் வைத்து பாதுகாத்தனர்.

காரணம் போரின் போது இவைகள் கொள்ளையடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக.

அத்துடன் இந்த சொத்துகளை ரகசியமாகவும் பாதுகாத்து வந்தனர், கால மாற்றத்தில் இவை புதையலாக வெளிப்படுகின்றன.

அப்படி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள புதையல் ஒன்றை முதலைகள் காவல் காப்பதாக நம்பப்படுகிறது.

குஜராத், அஹமதாபாத், காந்திகிராம் போன்ற பகுதிகளை போன்று ஜூனாகத் பகுதியில் வானுயர்ந்த கோட்டைகளுக்கு புகழ்பெற்றது.

சந்திரகுப்த மெளரியர் மற்றும் அசோகருடைய பேரரசின் ஒரு பகுதியாக இருந்ததாம். இங்கு ஸகா அரசர் மஹாசத்ரப் ருத்ரதாமன் ஆட்சியைச் சேர்ந்த கல்வெட்டுகளை நாம் காண முடியும்.

அதுமட்டுமின்றி அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் இந்நகரங்களில் முத்திரையை பதித்து சென்றுள்ளனர், பல பாறைகளில் குடையப்பட்ட புத்த குகைகளும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நகரத்தின் மேலே கிர்நார் சிகரம் உள்ளது, இதனை அடைய 9999 படிகளை உடைய மலைபாதைகள் மற்றும் கோவில்களை கடக்க வேண்டும்.

மிக முக்கியமாக மர்மமான பகுதியாக காணப்படும் உபர்கோட் கோட்டை கிமு 320ம் ஆண்டில் சந்திரகுப்த மௌரியரால் கட்டப்பட்டது.

கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள குகைகள் கி.பி 1 மற்றும் 4-ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

இந்தக் குகைகளில் அழகான நுழைவாயில்கள் மற்றும் தூண்கள், தண்ணீர் கோட்டைகள், சட்டசபை மண்டபம் மற்றும் தியானம் மண்டபம் போன்றவை உள்ளன.

இவற்றைக் கடந்து இருள் சூழ்ந்த சுரங்கத்தில் பயணித்தால் புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது.

அதற்கான மறைமுகக் குறியீடுகளும் குகையின் உட்புறத்தில் காணப்படுகிறது.

அத்துடன் குகையின் உள்ளே 1 மீற்றர் தூரத்தில் சுமார் 300 அடி ஆழம் கொண்ட அகழியில் முதலைகள் வளர்க்கப்பட்டதற்கான தடயங்களை காணலாம்.

யாரேனும் உள்ளே வந்தால் முதலைக்கு இரையாகும்படி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

இன்று முதலைகள் இல்லாவிட்டாலும் புதையலை தேடிச் செல்பவர்கள் உயிரிழந்துவிடுவது தொடர்கதையாகி உள்ளதாம்.