பிரபாகரன் உயிருடன் உள்ளார்? திரும்பி வருவார் என காத்திருக்கும் புலம்பெயர் மக்கள்

போர்க்காலத்தில் இருந்த ஒற்றுமையும் தலைமைத்துவமும் வேறு, தற்போது உள்ள ஒற்றுமையும் தலைமைத்துவமும் வேறு என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வண பிதா எஸ். ஜே. இம்மானுவேல் தெரிவித்தார்.

யாழ். ஆயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை என்ற வார்த்தை தாகத்தினைப் போன்று உள்ளது. தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் வாழலாம் என்பதனை ஊக்கப்படுத்தவே இங்கு மீண்டும் வருகை தந்துள்ளேன்.

நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் தமிழ் மக்களை எவ்வாறு ஊக்குவிக்க முடியுமோ அவற்றிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பது உண்மை தான். நம்பிக்கையுடன் வந்த அரசாங்கமும், எத்தனையோ விடயங்களை இன்னும் நிறைவேற்றவில்லை.

பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. நிறைவேற்ற வேண்டிய காரியங்கள் அதிகரித்துச் செல்கின்றன. அரசாங்கத்தின் மீது அதிருப்திகள் நிறைய உள்ளன. எமது தமிழ் சமூகத்திற்குள்ளும் நிறைய பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அவற்றினையும் நாமே தீர்க்க வேண்டும். வெளிச்சக்திகளை குற்றஞ்சாட்டினால், போதாது, போர்க்காலங்களில் நடைபெற்றதை விடுத்து, தற்போது எமது சமூகத்தில் நடப்பவற்றினை பார்த்தால், மன வருத்தத்தினை தருகின்றது.

எமது சமூகத்தில் காணப்படும், ஊழல்கள், பிரச்சினைகளுக்கு எதிராக போராட வேண்டும். உள் சமூகத்திற்குள் நடைபெறும், பிரச்சினைகளுக்கு எதிராக விழித்தெழுந்து போராட வேண்டும். தமிழ் சமூகத்தினைப் பார்க்கும் போது, தற்கொலை செய்வது போன்று தெரிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போர்க்காலத்தில் இருந்த ஒற்றுமைகள் வேறு. போரின் போது ஒரு தலைவரின் கீழ் தான் பணியாற்ற வேண்டும். பிரபாகரன் தலைவராக இருந்தார். பொறுப்பாளர்கள் இருந்தார்கள். ஜனநாயக முறைக்குள் வந்ததுடன் அனைவரும் பிரபாகரன் போன்று செயற்படுகின்றார்கள்.

தமிழர்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டுமாயின், இலட்சியத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த இலட்சியம் ஒரு விடுதலை இலட்சியம், விடுதலை மாண்பு இலட்சியம். எமது இலட்சியங்களை மதிக்க வேண்டும்.

பிரபாகரன் புதுப் பிறப்பாக கணிக்கப்பட்டவர். யுத்தத்திற்கு முன்னர் புலம்பெயர் மக்கள் பிரபாகரனின் வார்த்தைகளை மதித்தார்கள். பிரபாகரன் சொல்வதைச் செய்தார்கள். போர் நிறைவடைந்த பின்னர், அவர்கள் இவ்வாறு செய்வதில்லை.

போர் முடிந்துவிட்டது. போராட்டம் மற்றொரு உருவெடுத்துள்ளது. வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் மக்கள் இன்றும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நம்புகின்றார்கள். பிரபாகரன் திரும்பி வருவார் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

பிரபாகரன் எங்கிருந்தாலும் மக்கள் என்ன செய்கின்றார்கள் எனப் பார்த்துக்கொண்டிருக்கட்டும். மக்களுக்காகவும், நாட்டிற்காகவும், நீங்கள் பிரமாணிக்கமாக இருக்கின்றீர்களா என்பதே முக்கியம்.

அதுவே, பிரபாகரன் செய்த முதற் பணி. இலட்சியத்தினை துரோகமாக கருதாது, எமது செயற்பாடுகளை உரிய முறையில் செயற்படுத்த வேண்டும்.

புலம்பெயர் மக்களின் நிதிகளை கோவில்களில் பெருமை காட்டும் அளவிற்குப் பயன்படுத்தாதீர்கள், அந்த நிதிகளை கிராம மட்ட அபிவிருத்திகளுக்குப் பயன்படுத்துங்கள்.

புலம்பெயர் மக்களின் நிதிகள் திட்டமிடப்பட்டு, அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். கோவில்கள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்களை கட்டுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்,

யாழ்.மாவட்டத்தில கல்யாண மண்டபங்களும், கோவில்களும், ஹோட்டல்களும் நிறைந்து காணப்படுகின்றன. அந்த நிதிகளை வைத்து கிராம அபிவிருத்திகளை முன்னெடுங்கள்.

2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர், இலங்கை அரசு தமிழர்களுக்கு தீர்வு வழங்குமென அமெரிக்கா எதிர்பார்த்தது. தற்போதைய அரசாங்கம் பலமாக இருக்க வேண்டும் தொடர வேண்டுமென்ற நோக்கத்தில் இங்கு செயற்பட்டிருந்தோம்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எமக்கு எதிராக நீண்ட பட்டியல்கள் போடப்பட்டிருந்தன. தற்போது அந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் எனது புகைப்படங்களை போட்டுப் பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்தார்கள்.

ஆனால், அந்த புகைப்படங்கள் இப்போது எடுக்கப்பட்டுள்ளன. ஏனைய அமைப்பினர் மீதான தடைகளையும் நீக்க வேண்டும். எமது நாட்டில் சனத்தொகை குறைந்துகொண்டு செல்கின்றன. எமது சனத்தொகை அதிகரிக்க வேண்டும்.

சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தின் போது, பல கோவில்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது, சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்துள்ளேன். நல்லிணக்கத்திற்கு செயலாற்ற ஆராய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தெரிவித்தேன்.