ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும் பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கான அழுத்தங்களை தொடர்ந்து முன்னெடுக்கும்.
அந் தப் பொறுப்பிலிருந்து அமெரிக்கா விலகாது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தரப்பினர் வெற்றிபெறுவது கடினமான காரியமாகும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை நேற்று முன்தினம் மாலை அமெரிக்கத் தூதுவர் சந்தித்து கலந்துரையாடி யிருந்தார்.
இந்தச் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பதவி வகித்துவரும் அதுல் கெசாப் அடுத்த மாதம் இலங்கையிலிருந்து தனது நாட்டுக்கு திரும்புகின்றார்.
பதவிக்காலம் முடிவடைந்து வாஷிங்டன் செல்லும் அவர் அரசாங்கத் தலைவர்களையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து பிரியாவிடை பெற்று வருகின்றார். இதன் ஒரு அங்கமாக நேற்று முன்தினம் வடமாகாண முதலமைச்சரை கொழும்பில் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணையினை நடத்தக்கோரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பிரேரணை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளமையினால் பொறுப்புக்கூறும் விடயத்தில் அழுத்தங்கள் குறைவடைந்துவிடும் என்ற தனது அச்சத்தையும் முதலமைச்சர் அமெரிக்க தூதுவரிடம் எடுத்துக்கூறியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த தூதுவர் அப்துல் கசாப் ஐ.நா.மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும் இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்தும் விடயத்தில் எம்முடன் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது.
இதனால் அந்த பொறுப்புக்கூறும் விடயத்திலிருந்து இலங்கை அரசாங்கம் நழுவிவிட முடியாது. இதற்கான அழுத்தங்களை தொடர்ந்தும் அமெரிக்கா முன்வைக்கும்.
அரசாங்க உயர்மட்டத்தினருக்கு இவ்விடயம் தொடர்பில் நாம் எடுத்துக்கூறியுள்ளோம். இதனால் பிரேரணையை அமுல்படுத்தும் விடயத்தில் நாம் தொடர்ந்தும் அக்கறை காண்பிப்போம் என்று தெரிவித்திருக்கின்றார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமெரிக்க தூதுவர், ஜாதிபதித் தேர்தலில் மஹிந்த தரப்பு வெற்றிபெறுவது கடினமான காரியமாகவே இருக்கும்.
மஹிந்த தரப்பினரை முப்பது வீதமான மக்களே ஆதரிப்பதாகத் தெரிகின்றது. ஏதோ ஒரு காரணத்துக்காக ஏனைய மக்கள் அவர்களுக்கு எதிராகவே உள்ளனர். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ அமெரிக்க பிரஜை என்பதனால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாயின் அமெரிக்க பிரஜா உரிமையை நீக்குவதில் ஏதேனும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி வருமா என்று முதலமைச்சர் அமெரிக்க தூதுவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த அதுல் கெசாப் அமெரிக்க பிரஜையாகவுள்ள ஒருவர் அந்தப் பிரஜாஉரிமையை இரத்துச் செய்யவேண்டுமானால் அதற்கான சட்டதிட்டங்கள் உள்ளன. அவ்வாறான நிலையில் அந்த சட்டதிட்டங்களில் அமெரிக்க அதிகாரிகள் தலையிட முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபான்மைஇன மக்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதுல் கெசாப், சிறுபான்மைஇன மக்கள் தமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான வலியுறுத்தல்களை விடுக்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைஇன மக்களின் பங்களிப்பு என்பது பிரதான வேட்பாளர்களுக்கு அவசியமானதாகவே இருக்கின்றது. எனவே இத்தகைய சந்தர்ப்பங்களை உரிய வகையில் சிறுபான்மை இன மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுளள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், பெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்து வருகின்றன.
இவர் மஹிந்த தரப்பைப்போன்று கருத்துக்களைத் தெரிவிக்க முற்படுகின்றார். யதார்த்தபூர்வமான முறையில் ஜனாதிபதி செயற்பட்டால் அது நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் அந்த வழியில் செல்வதற்கு அவர் விரும்புகின்றாரில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.






