மாப்பிள்ளையைக் கலங்கடித்த மின்னல்! – திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

மின்னல் தாக்கி மனிதர்கள் உயிரிழந்த செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மின்னலால் திருமணம் நின்ற செய்தியை என்றாவது கேள்விப்பட்டதுண்டா?. அப்படி ஒரு சம்பவம் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில், நேற்று நடைபெற இருந்த திருமணத்தை, மணப்பெண் நிறுத்திவிட்டார். இதனால், மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பெண் வீட்டைச் சேர்ந்த மூன்று நபர்களைக் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `மின்னல் வெட்டும் போதெல்லாம் அதைக் கண்டு மணமகன் மிகவும் பயந்துள்ளார். மேலும், மின்னல் வரும்போதெல்லாம் அதிர்ந்து வித்தியாசமாகவும் நடந்துள்ளார். மணமகனின் இந்த விநோத செயலை ஜீரணித்துக்கொள்ள முடியாத மணப்பெண், அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்திருக்கிறார். மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை, அதனால் திருமணத்தை நிறுத்துமாறு இரு வீட்டாரிடமும் சொல்லியிருக்கிறார். மின்னலுக்குப் பயப்படுவதை ஒரு காரணமாக முன்வைத்து திருமணத்தை நிறுத்துவது அபத்தம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் மணமகன் குடும்பத்தினர். திருமணத்துக்கு முன் நடக்க வேண்டிய அனைத்து சடங்குகளும் நடந்ததையடுத்து, திருமணத்தை நிறுத்த முடியாது எனவும் முறையிட்டுள்ளனர் மாப்பிள்ளை வீட்டார். இதனால், இரு வீட்டாருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெண் வீட்டைச் சேர்ந்த மூன்று பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்’ என்றார்.