காதலர்களுக்கு வசதியாக காதல் ஹொட்டல்கள்… தெரியுமா?

கியூபா நாட்டில் காதலர்கள் தனிமையில் பழகுவதற்கு வசதியாக அரசாங்கமே ஏற்று நடத்தும் ‘காதல் ஹொட்டல்கள்’ திறக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

கரீபிய தீவு நாடுகளில் ஒன்றான கியூபாவில் காதலர்கள் தங்கி பழகுவதற்கு வசதியாக அரசாங்கமே ஹொட்டல்களை நடத்தி வந்துள்ளது.

ஆனால், 1990-களில் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதால் இந்த ஹொட்டல்களை மூட அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து காதலர்கள் திறந்தவெளிப் பகுதிகளில் ஜோடி, ஜோடியாக அமர்ந்து காதலித்து வருவது பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்ட கியூபா அரசு தற்போது இந்த ‘காதல் ஹொட்டல்களை’ மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளது.

கியூபா தலைநகரான ஹவானாவில் இதுபோன்ற 5 ஹொட்டல்கள் திறக்கப்பட உள்ளன.

இந்த ஹொட்டல்களில் உள்ள அறைகளில் காதலர்களுக்கு ஏ.சி, குளிர்சாதனப்பெட்டி, படுக்கை அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அரசாங்கமே ஏற்பாடு செய்து தருகிறது.

அதே போல், இந்த அறையில் காதலர்கள் தங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு 5 டொலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கியூபா நாட்டில் பொதுமக்களின் சராசரி வருமானம் 22 டொலர் முதல் 29 டொலர் வரை ஆகும்.

இதனால் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் அதிகமாக உள்ளதாக தற்போது காதலர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.

எனினும் posadas என்று அழைக்கப்படும் இந்த காதல் ஹொட்டல்கள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு அந்நாட்டு காதலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.