ரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இருந்தது ஏன்?

ரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இருந்தது ஏன்?! #WorldCup

சமூக வலைதளங்களில் கால்பந்து வட்டாரத்தில் ஒரு வீடியோ செம வைரல். காலகலாமாக ஐரோப்பிய கால்பந்தை வெறித்தனமாக ஃபாலோ செய்யும் ரசிகர்கள் கூட, அந்த வீடியோவில் இருக்கும் மெசேஜைப் பார்த்து, `அட இத்தனை நாள் இது எனக்குத் தெரியாதே’ என ஆச்சர்யப்படுகின்றனர்.

ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் கடைசி நிமிடத்தில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஃப்ரி கிக்கை கோல் அடிக்கிறார். ஆட்டம் 3-3 டிரா. இந்த உற்சாகத்தில் போர்ச்சுகல் வீரர்கள் அத்தனை பேரும், களத்தை விட்டு வெளியே வந்து ரொனால்டோவைச் சுற்றி வளைத்து கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், ஜோஸ் ஃபோன்டே மட்டும் களத்தில் இருந்தார்.

`FIFA விதிமுறைப்படி, ஓர் அணியின் அத்தனை வீரர்களும் (கோல் கீப்பர் தவிர்த்து) களத்துக்கு வெளியே கொண்டாட்டத்தில் ஈடுபட்டால், எதிரணி உடனடியாக கிக் ஆஃப் செய்யலாம். அதனால்தான் ஜோஸ் ஃபோன்டே கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் களத்தில் இருந்தார். இல்லையெனில் ஸ்பெயின் உடனடியாக கிக் ஆஃப் செய்து கோல் அடித்திருக்கும்’ என அந்த வீடியோவில் காரணம் சொல்லப்பட்டுள்ளது.

ஜோஸ் ஃபோன்டே  மட்டுமல்ல, இங்கிலாந்து – துனிஷியா போட்டியின்போது ஹேரி கேன் கோல் அடித்தபோது ஒட்டுமொத்த இங்கிலாந்து வீரர்களும் களத்துக்கு வெளியே சென்று கொண்டாடினர். ஆனால், டிரிப்பியர் மட்டும் களத்தில் இருந்தார்.

இந்த இரு சம்பவத்தையும் பார்க்கும்போது, சோசியல் மீடியாவில் உலவும் அந்த வீடியோ சொல்லும் மெசேஜ் உண்மைதானோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ரெஃப்ரி பேனலில் இருப்பவரிடம் தொடர்புகொண்டோம். அவர் பல குழப்பங்களைத் தெளிவுபடுத்தினார்.

Football is for what? கோல், கொண்டாட்டம்தானே கால்பந்தின் அடிநாதம். ஒரு வீரர் கோல் அடித்ததும் களத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாது, சப்ஸ்டிட்யூட் பிளேயர்கள் கூட மைதானத்துக்கு உள்ளே ஓடி வந்து, கோல் அடித்த வீரர் மேலே விழுந்து கொண்டாடுவர்.  ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொள்வர். உச்சி முகர்வர். சிலநேரம் வீரர்கள் எல்லோரும் வெளியே வந்து பயிற்சியாளரைக் கட்டித் தழுவுவர். அவரைத் தூக்கி வைத்து கொண்டாடுவர். இவை எல்லாவற்றையும் ரெஃப்ரி உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கொண்டாட்டத்துக்கு அதிகமான நேரம் எடுத்துக் கொள்ளாமல், குறுகிய நேரத்தில் செலிபிரேசனை முடித்து, ஆட்டத்தை மீண்டும் தொடங்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ரெஃப்ரியின் கடமை. இந்தமாதிரி நேரத்தில் ரெஃப்ரி விழிப்பு உணர்வுடனும் ப்ரோஆக்டிவ்னஸுடனும் இருக்க வேண்டும். தவறு நடப்பதற்கு முன், அதைச் சரி செய்வதற்குரிய முயற்சியில் அவர் ஈடுபட வேண்டும்.

கொண்டாட்டத்தின்போது வீரர்கள் வெளியே செல்லக் கூடாது; வெளியே இருக்கும் வீரர்கள் உள்ளே வரக் கூடாது என்று FIFA விதிமுறைகளின் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. விதியில் குறிப்பிடப்படுவது என்னவெனில், ரெஃப்ரியின் அனுமதியின்றி வீரர்கள் வெளியே செல்லக் கூடாது; உள்ளே வரக் கூடாது. அவ்வளவுதான்.

செலிபிரேஷனுக்கு தடைகள் இல்லை. யாராலும் கொண்டாட்டத்தைத் தடுக்க முடியாது. இங்குதான் கொண்டாட வேண்டும். அங்குதான் கொண்டாட வேண்டும். இப்படித்தான் கொண்டாட வேண்டும். அப்படித்தான் கொண்டாட வேண்டும் என செலிபிரேசனுக்கு எந்தவிதமான தடையும் இல்லை. நான்கைந்து வீரர்கள் மட்டும் சுற்றி நின்று நடனம் ஆடுவர். ஆப்பிரிக்க வீரர்கள் ஒருவிதமாக டான்ஸ் ஆடி கொண்டாடுவர். அதற்கெல்லாம் நேரம் எடுக்கும். அந்த நேரத்தில் ரெஃப்ரி தலையிட்டு, உடனடியாக வீரர்களை அவர்களது இடத்துக்குச் செல்ல வற்புறுத்தி, ஆட்டத்தை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.

#WorldCup

எல்லோரும் கொண்டாட்டத்தில் இருக்கும்போது, எதிரணி வீரர்கள் கிக் ஆஃப் செய்து கோல் அடித்தால், அது நன்றாகவா இருக்கும்? ஸ்போர்டிவ் ஸ்பிரிட் அடிபட்டுப் போகாதா?

you can go by letter of law. Letter of law சொல்வதன்படியே செல்வது Modern ரெஃப்ரியிங் அல்ல. கால்பந்து எதை எதிர்பார்க்கிறது, எது சரியான விதி, அதை எப்படி நடைமுறைப்படுத்துவது, அந்த விதிகளை எப்படி மேலாண்மை செய்வது என்பதை நன்கு தெரிந்துவைத்திருப்பதே Modern ரெஃப்ரியிங்.

விதிகள் பல விஷயங்களைச் சொல்லும். ஆறு விநாடிகளுக்கு மேல் கோல் கீப்பர் பந்தைக் கையில் வைத்திருக்கக் கூடாது என்று ஒரு விதி இருக்கிறது. அதற்காக எல்லா கோல் கீப்பர்களும் ஆறு விநாடிகளுக்குள் பந்தை ரிலீஸ் செய்கிறார்களா ? நிச்சயமாக இல்லை. குறைந்தது 10 செகண்ட்களுக்குப் பின்னரே பெரும்பாலான கோல்கீப்பர்கள் கிக் ஆஃப் செய்கின்றனர். இந்த மாதிரி சூழலில், ரெஃப்ரி எப்படி செயல்பட வேண்டுமெனில்… ஆறு நொடிகளுக்கு மேல் கோல் கீப்பர் பந்தைக் கையில் வைத்திருக்கிறாரா? அதன் நோக்கம் என்ன? அவரது அணி முன்னிலையில் இருக்கிறதா? அதற்காக கோல் கீப்பர் நேரத்தைக் கடத்துகிறாரா? அப்படியெனில், இந்த இடத்தில் ரெஃப்ரி, அந்த ஆறு செகண்ட் விதிமுறையை நடைமுறைப்படுத்தலாம். பெனால்டி பாக்ஸுக்கு உள்ளே indirect free kick கொடுக்கலாம். ஒருவேளை அணி பின்தங்கிய நிலையில் இருக்கும்போது கோல் கீப்பர் நேரம் கடத்துகிறார் எனில், அது அவர்களது அணிக்குத்தான் பின்னடைவு. இந்த இடத்தில் ரெஃப்ரி எதுவும் செய்ய வேண்டியதில்லை.

இப்படி பேப்பரில் இருக்கும் விதிகளை, ரெஃப்ரி ஆட்டத்தின் தன்மையை உணர்ந்துதான் செயல்படுத்துவார். அவர் அப்படியே விதிகளைப் பின்பற்றினால், கால்பந்து கால்பந்தாகவே இருக்காது. ஜோஸே ஃபான்ட், கீரன் டிரிப்பியர் இருவரும் கொண்டாடுவதற்காக வெளியே செல்லாததற்கு வேறு காரணங்கள் கூட இருக்கலாம். கால்பந்து என்றுமே கொண்டாட்டங்களுக்குத் தடையாக இருக்காது. ஏனெனில் கால்பந்து என்பதே கொண்டாடுவதற்குத்தான்!