வித்தியா வழக்கின் விசாரணைகள் அனைத்தும் நிறைவு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியா வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கின் விசாரணைகள் தற்போது முடிவடைந்து, வழக்கு கேவை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோர் பிரதான சந்தேகநபர்களாவர்.

உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி உள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க இன்று மன்றில் முன்னிலையாகி இருந்தார்.

மன்றில் முன்னிலையான அரச சட்டவாதி இவ்வழக்கின் விசாரணைகள் முற்றுப்பெற்று வழக்கின் கோவை தற்போது சட்டமா அதிபரின் ஆலோசனைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து குறித்த வழக்கை எதிர்வரும் 10ஆம் மாதம் 10ஆம் திகதி வரை ஊர்காவற்துறை நீதவான் நீதிபதி ஏ.யூட்சன் ஒத்தி வைத்தார்.