அசுர வேகத்தில் பரவி வரும் உயிர்கொல்லி! மீண்டும் ஒரு திட்டமிட்ட இன அழிப்பா?

நாட்டில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் வாழும் தமிழர்களை மையப்படுத்தி தற்போது நுண்நிதிக்கடன் என்ற பெயரில் உயிர்கொல்லி ஒன்று அசுர வேகத்தில் பரவி வருகின்றது.

இந்த நுண்நிதிக்கடன் செயற்றிட்டங்கள் தற்போது வரையிலும் நாட்டில் பல உயிர்களை காவு கொண்டுள்ளதுடன், இது மீண்டும் ஒரு திட்டமிட்ட இன அழிப்பினை நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கு மலையகப் பகுதிகளில் நுண்நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனைப் பெற்று அதனை மீள செலுத்தமுடியாத நிலையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தற்கொலை செய்துகொண்டதுடன் பலர் மன உளைச்சல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

சாதாரண மற்றும் வறிய மக்களை இலக்காகக் கொண்டு இந்தக்கடன் வழங்கப்பட்டு வருகின்றது.

பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே இக்கடன் தொகை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை காணப்படுவதால் குறித்த மக்கள் அவற்றை பெற்றுக்கொள்வது மாத்திரமன்றி மீள செலுத்தமுடியாத நிலையில் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

நுண்கடனைப் பெற்றுக்கொள்ளும் பெரும்பாலான குடும்பங்கள் அவற்றை தமது வீடுகளைத் திருத்துவதற்கும், விவசாய செய்கைக்கும் இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர்.

அதேவேளை கிழமை அடிப்படையிலும் மாதாந்த அடிப்படையிலும் வழங்கப்படும் தவணைகளுக்கு ஏற்ப அதனை மீளச்செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இந்தக் கடன்கள் மக்களின் தேவைகளையோ அன்றி அவர்களின் நிலையினையோ நன்கு அறியாத நிலையில் வழங்கப்படுகின்றன.

இதனால் கடனைப் பெறுவோர் அதனை மீள செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதுடன் கடனாளிகளாகின்றனர்.

இறுதியில் அவர்கள் பெரும் மனவிரக்திக்கு ஆளாவதுடன் மறைந்து வாழும் சூழலுக்கும் தள்ளப்படுகின்றனர். உண்மையில் குறித்த நுண்நிதி நிறுவனங்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்கு துணைநிற்க வேண்டுமே தவிர மாறாக அவர்களை பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட முயற்சிக்கக்கூடாது.

குறிப்பாக தற்போதைய நிலையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமுர்த்தி கடன் திட்டத்தைத் தவிர்த்து அனைத்து நுண்கடன் திட்டங்களினதும் வட்டிவீதம் 22 வீதத்தையும் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது 100 ரூபாவுக்கு 22 ரூபாவை செலுத்தவேண்டியுள்ளது, இந்நிலையில் போதிய வருமானமற்ற குடும்பங்கள் கடனை மீள செலுத்த முடியாது தவித்து வருகின்றன. அது மாத்திரமின்றி மேலும் சிலவர் ஒன்றுக்கு மேற்பட்ட 56 நிறுவனங்களிடமிருந்து நுண்கடனைப் பெற்றுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதேவேளை நுண்நிதி நிறுவனங்கள் தமது கடன்களை மீள அறவிடுவதற்கு பல்வேறு காலவரையறைகளை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கடன்களை மீள செலுத்த தவறுவோர் மிகுந்த இம்சைகளுக்கு ஆளாவதைக் காண முடிகின்றது.

கடன்தொகையை அறவிடவருவோர் குறித்த கடனாளி அதனை செலுத்தத்தவறும் பட்சத்தில் அவர்களை மிரட்டி தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து அதனை மீளப்பெற முயற்சிக்கின்றனர்.

இதனால் கடனைப்பெற்றோர் பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்றனர். நுண்கடன்களை மீளப்பெறவருவோர் திரைப்படங்களில் வரும் தாதாக்களைப்போல நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

பெண்கள் என்றும் பாராமல் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் வீட்டு வாசலில் வந்து கூச்சலிடுவதாகவும், இதனால் தமது கௌரவமும் பாதிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்திலும் வடபகுதியிலும் பெரும்பாலான குடும்பங்கள் கடன் சுமையால் தத்தளிப்பது மாத்திரமின்றி தவறான முடிவுகளை எடுக்கவும் தள்ளப்படுகின்றனர்.

கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் அதனை அறவிடவருவோருக்கு அஞ்சி சிலர் தூக்கில் தொங்கியும் தீ வைத்துக்கொண்டும் கிணற்றில் பாய்ந்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

குறித்த குடும்பங்களின் வருமானம், தொழில், கடனை மீள செலுத்தக்கூடிய நிலை என்பவற்றைக் கருத்தில் கொள்ளாது இவ்வாறு நுண்நிதி நிறுவனங்கள் கடனை வழங்கிவிட்டு பின்னர் அடாவடித்தனத்தில் அதனை மீட்க முயல்வது மிகவும் விசனத்திற்குரியது.

வருமானம் குறைந்த ஏழைக்குடும்பங்கள் எவ்வாறேனும் அதிலிருந்து மீளும் வகையில் கடனைப்பெற தள்ளப்படுகின்றன.

இறுதியில் அதனை மீள செலுத்த முடியாது தர்மசங்கடமான நிலைக்கு குறித்த குடும்பங்கள் ஆளாகின்றனர்.

நாட்டில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவை சமாளிக்கமுடியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் பெற்ற கடனை எவ்வாறு திருப்பி செலுத்துவது என்ற பாரிய நெருக்கடிக்கு பெரும்பாலான மக்கள் ஆளாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், நுண்நிதி நிறுவனங்கள் வெறுமனே எழுந்தமானத்திற்கு கடனை வழங்கி மக்களை கடனாளியாக்கிவிட்டு பின்னர் அவர்களை துரத்தி கடனை மீள செலுத்த நிர்ப்பந்திப்பது சமூக மட்டத்தில் பெரும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.