பிரபாகரனுக்காக சிவாஜிலிங்கம் நஸ்டஈடு பெறலாம்!!: அமைச்சா் சுவாமிநாதனை விமா்சிக்கும் சிங்கள ஊடகம்

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு உதவும் செயற்றிட்டம் ஒன்றை கொண்டுவந்த அமைச்சா் டீ. எம்.சுவாமிநாதனுக்கு எதிராக சிங்கள ஊடகம் ஒன்று ஆசிாியா் தலையங்கம் வெளியிட்டிருக்கின்றது.

மீள்குடியேற்றம் மற்றும் புனா்வாழ்வு அமைச்சரான டீ.எம்.சுவாமிநாதன் முன்னாள் போராளிகளுக்கு உதவும் செயற்றி ட்டம் ஒன்றை அமைச்சரவைக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், அதனை ஜனாதிபதி நிராகாித்திருந்தாா்.

இந்நிலையில் மேற்படி சிங்கள ஊடகம் டீ.எம்.சுவாமிநாதனை கடுமையாக சாடி ஆசிாியா் தலையங்கத்தை எழுதியுள் ளது. அந்த ஆசிாியா் தலையங்கம் இப்படி எழுதப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அரசாங்க அமைச்சர்கள் சிலர் கடுமையான ஆட்சேபத்தை வெளியிட்டிருந்தனர்.

நாட்டை இரண்டாக பிளவடையச் செய்ய போராடிய புலிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட முடியுமா? ஆர். பிரேமதாசவிற்கு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டுமா?

ஸ்ரீ மஹா போதி, தலதா மாளிகை ஆகியனவற்றை தாக்கியவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமா?

புலி உறுப்பினர்கள் நாட்டை பிளவடையச் செய்யவே போராடினார்கள். அரசாங்கத்திற்கு எதிராக போர் செய்தவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமா?

30 ஆண்டு போரினால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு நகரில் புலிகளின் குண்டுத் தாக்குதலினால் சிதைவடைந்த குடும்பங்களுக்கு நட்டஈடு எவ்வித முன்மொழிவுகளையும் அமைச்சர் சுவாமிநாதன் பரிந்துரை செய்யவில்லை.

இந்த அமைச்சரவை பத்திரம் என்ன நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது? இந்த யோசனை ஒட்டுமொத்த இலங்கையர்களையும் அவமானப்படுத்தும் வகையிலானது.

இந்த யோசனை ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் யோசனையா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை. இது யாருடைய தேவை என்றாலும் இதனை நிறைவேற்ற முடியாது.

உயிரிழந்த புலிகளுக்கு நட்ட ஈடு வழங்குவதாயின் பாடையினருக்கு நினைவஞ்சலி நடத்துவதில் பயனில்லை. நட்டஈடு வழங்கினால் பயங்கரவாதிக்கும் படைவீரனுக்கும் இடையில் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

நாட்டை பாதுகாக்க யார் போராடினார்கள் என்பது அமைச்சர் சுவாமிநாதனுக்கு புரியாமை வருத்தமளிக்கின்றது.

இந்தியாவின் சில மாநிலங்களில் மாவோ கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர், இவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்குவதில்லை.

காஷ்மீரில் போராடும் தீவிரவாதிகளுக்கு நட்டஈடு வழங்க இந்திய அரசாங்கம் கனவிலும் நினைத்தது கிடையாது.

ஆப்கானிஸ்தானில் உயிரிழந்த தலிபான் தீவிரவாதிகளுக்க அந்நாட்டு அரசாங்கம் நட்டஈடு வழங்கதில்லை. அல் கய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக போராடிய அமெரிக்க அரசாங்கம் அவர்களுக்கு நட்டஈடு வழங்கதில்லை.

இவ்வாறான ஓர் நிலையில் புலிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குவது நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டையும், இறைமையையும் காட்டிக் கொடுக்கும் செயலாகும்.

புலிகளுக்கு எதிராக போராடி உயிர் நீத்த தமிழ் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டுக்காக உயிர் நீத்த தேசப்பற்றாளர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.

சுவாமிநாதனின் இந்த அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக பிரபாகரனுக்காக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் சிவாஜிலிங்கம் பிரபாகரனின் மைத்துனராவார்.

இலங்கை வரலாற்றை இழிவுபடுத்தும் இந்த அமைச்சரவை பத்திரம் கிழத்து எறியப்பட வேண்டும்.

இந்த அமைச்சரவை பத்திரம் அங்கீகரிக்கப்பட்டால் தாய் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த அனைவரினதும் அர்ப்பணிப்புக்கள் குழி தோண்டி புதைக்கப்படும்.” என திவயின தனது ஆசிரியர் தலையங்கத்தில் கடுமையாக சாடியுள்ளது.