வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் போன்ற உருவம் கொண்ட நபரை சிங்கப்பூர் குடியேற்றத் துறை அதிகாரிகள் சிறை பிடித்தனர்.
அணுஆயுதச் சோதனைகளால் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இறங்கி வந்துள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தையின் முதல்படியாக தென்கொரியா சென்று, அந்நாட்டு அதிபரை இரண்டு முறை அவர் சந்தித்துப் பேசினார். மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பைச் சந்தித்துப் பேசவும் அவர் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, ட்ரம்ப் – கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வரும் 12ம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கிம் ஜாங் உன் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட ஒருவரை அந்நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர். ஹாங்காங்கைச் சேர்ந்த ஹோவார்ட் எக்ஸ் என்ற அந்த நபர் இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “சிங்கப்பூர் அதிகாரிகள் இன்று காலை என்னை சுமார் 2 மணி நேரம் சிறைபிடித்தனர். நிகழ்ச்சி ஒன்றுக்காக அதிகாலை 3.30 மணியளவில் சிங்கப்பூர் சென்ற என்னை, கிம் ஜாங் உன் போன்ற சாயல் இருப்பதால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தினர். விசாரணையின் போது கேள்விகளால் என்னைத் துளைத்தெடுத்த அதிகாரிகள், எனது ஊர், செய்யும் வேலை, முகவரி உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கேட்டுப் பெற்றனர். என்ன தொழில் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு இசை ஆல்பங்கள் தயாரிப்பாளாராக இருக்கிறேன் என நான் பதிலளித்தேன். அதேபோல், ஏதேனும் அரசியல் இயக்கங்களில் உறுப்பினராக இருக்கிறீர்களா, உலக அளவில் ஏதேனும் போராட்டங்களில் பங்கு பெற்றுள்ளீர்களா எனப் பல்வேறு கேள்விகளை அவர்கள் கேட்டனர்.