சம்பந்தன் உரிய நேரத்தில் முடிவெடுப்பதாகவும் கருத்து!

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப் பணிக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அனைவரதும் கடமை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பைப் பொறுத்த வரையில் தற்பொழுது கருமங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.

புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்றம் அரசியல் அமைப்புச் சபையாக மாற்றப்பட்டு நடவடிக்கைக்குழு, உபகுழுக்கள் அமைக்கப்பட்டு, இந்தக் குழுக்களின் அறிக்கைகள் அரசியல் சாசன சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அங்கு விவாதம் நடைபெற்று, இவை எல்லாவற்றினதும் அடிப்படையில் முடிவுகளை எடுத்து அதை மீண்டும் அரசியல் சாசன சபைக்கு சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

நடவடிக்கைக்குழு கூடி, இந்த மாதம், இந்தக் கருமம் நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு மாதத்துக்குள் நிபுணர் குழுவினுடைய வரைபு வெளிவரும் என்று நாம் நம்புகின்றோம்.

அது வெளிவர வேண்டும். அதன் பின்னர் அரசியல் சாசன வரைபு, அரசியல் சாசன சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதற்கு சிலர் மத்தியில் ஒத்துழைப்பு, இல்லாத போதிலும் கூட பல அரசியல் கட்சிகளும் அந்தக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்கக் கூடிய ஒரு நிலைமை, இல்லாமல், இல்லை. இருக்கின்றது என்று கருத, இடமுண்டு.

எனவே, இந்தப் பணியை முன்னெடுப்பதற்கு எங்களால் இயன்ற அத்தனை ஒத்துழைப்பையும் நாங்கள் நல்க வேண்டியது நமது கடமை.

நாடாளுமன்றத்தால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் சாசனத்தை உருவாக்க முடியாத நிலைமை ஏற்படும் பட்சத்தில் அவ்விடயம் சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் தங்களுடைய எதிர்கால நடவடிக்கை சம்பந்தமாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய தேவை ஏற்படும்.

அந்த முடிவை அந்த நேரத்தில், உரிய நேரத்தில் நாங்கள் எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.