அல்சைமர் பாதிப்பை தடுக்கும் இசை!

தெற்காசிய நாடுகளில் 2050 ஆம் ஆண்டில் அல்சைமர் என்னும் நினைவுத்திறன் இழப்பு நோயால் பாதிக்கப்படும் முதியவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தொடும் என்று மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதனால் முதுமையடைந்தவர்கள் இந்த பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும் என்றால் தினமும் இசையை கேட்கவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நாற்பது வயதைக் கடந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிய அளவிலான ஞாபக மறதிக்கு ஆளாவார்கள். இதனையே அறிகுறியாக எடுத்துக் கொண்டு தினமும் உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கான செயல்பாடுகளில் இறங்கவேண்டும். காலையில் உடற்பயிற்சி, நடைபயிற்சி, மெல்லோட்டம் போன்றவற்றில் ஈடுபடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். உடல் எடையையும், இடுப்பு அளவையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டேயிருக்கவேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடவேண்டும். இரத்த அழுத்தத்தையும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் கண்காணித்துக் கொண்டே கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டும்.

இதனுடன் தினமும்உங்களுடைய விருப்பமான நேரத்தை ஒதுக்கி இசையை கேட்கவேண்டும். அவை எந்த வடிவமாகவும் இருக்கலாம். ஆனால் இசை கேட்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். இசையை கேட்பதால் மூளையில் உள்ள செல்கள், மூளையில் உள்ள சுயகாரியங்களுக்கான அலைவரிசை, காட்சி மூலம் உணர்தலுக்கான அலைவரிசை, நாளாந்த பணியாற்றும் அலைவரிசை, நிர்வாக அலைவரிசை, சிறுமூளைக்கான செல்கள், கோர்டிகோ செரிபெல்லர் நெட்வொர்க் போன்றவற்றில் இயங்கும் செல்கள் சோர்வடையாமல் உற்சாகத்துடன் இயங்க இசை உதவி செய்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இதனால் நினைவு திறன் இழப்பு நோய் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு மனசோர்வினால் ஏற்படும் டிமென்ஷியா என்ற பாதிப்பும் தொடர்ச்சியான இசையை கேட்பதன் மூலம் நிவாரணம் கிடைப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

அல்சைமர் நோய் பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் செல்கள் இறக்கும் தன்மைக்கோ அல்லது செயல்படாத தன்மைக்கோ செல்லும் முன் இசையை கேட்கவைத்தால் அந்த செல்கள் புத்துயிர் பெறுவதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் இசையை கேட்பதன் மூலம் மன அழுத்தம், மனச் சோர்வு, பதற்றம், கவலை ஆகியவற்றிற்கு உரிய முறையில் நிவாரணம் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே நீங்கள் நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருந்தால், உங்களுக்கு எதிர்காலத்தில் அல்சைமர் என்னும் பாதிப்பு வராமலிருக்க இசையை கேட்க பழகிக்கொள்ளுங்கள்.

வைத்தியர் சைமன்

தொகுப்பு அனுஷா.