சம்பந்தனுடன் திடீர் சந்திப்பை ஏற்படுத்திய முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து கலந்துரையாடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து 16 நாடாளுமன்ற உறுப்பினர் விலகியிருந்தனர். இதனால் அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தாலும் அரசாங்கம் இது குறித்து பெரிதாக பேசிக் கொள்ளவில்லை.

ஆனால், அவர்கள் மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியினருடன் இணைந்து அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களது அணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது இடம்பெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு உறுதிசெய்துள்ளது.

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா உள்ளிட்ட குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடப்படுவதாக கூட்டமைப்பினரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டணிகள் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று கூட்டமைப்பினுடனான சந்திப்பிலும் 20வது திருத்தச் சட்டம் தொடர்பிலும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.