2019 முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல்? பிரதான கட்சிகள் தீவிர ஆர்வம்…!

புதிய அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எட்டவாது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வை, கடந்த எட்டாம் திகதி ஆரம்பித்து வைத்தாலும், இருபிரதான அரசியல் கட்சிகளுக்கிடையேயும் முரண்பாடுகள் தொடர்வதாக அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து பேசியதாக மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.2020ஆம் ஆண்டு நடத்த வேண்டிய ஜனாதிபதி தேர்தலை, 2019ஆம் ஆண்டு முற்பகுதியில் நடத்துமாறு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைத்து, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கலாம் என அவர்கள் நம்புவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலை 2019ஆம் ஆண்டு முற்பகுதியில் நடத்த, ஐக்கிய தேசியக் கட்சியும் விரும்புவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

ஆனால், மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கி, பிரதமர் தலைமையிலான ஆட்சி முறையை உருவாக்கிய பின்னர், பொதுத் தேர்தலை நடத்த விரும்புவதாகவும் கூறப்படுகின்றது.ஆனால், நிறைவேற்று ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை தற்போதைக்கு நிறைவேற்ற முடியாதென ஐக்கியதேசியக் கட்சி கூட்டு எதிர்க்கட்சியிடம் கூறியுள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் அமைச்சரவையின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெற்றால், அதனை எதிர்கொள்ள கூட்டு எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன கொழும்பில் ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.இதேவேளை, மைத்திரி ரணில் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்ப்பதற்கும், 20 ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அங்கீகரிப்பதற்கான இணக்கத்தை ஏற்படுத்தவும், பௌத்த மகாநாயக்க தேரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் மற்றுமொரு தகவலொன்று கூறுகின்றது.