பாரிஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை, ஸ்பைடர்மேன் போல தாவிப்பிடித்து காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன. சிறுவனை அவர் காப்பாற்றும் வீடியோ, தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகப் பரவிவருகிறது.

பாரிஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று, நான்காவது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன், பால்கனியில் இருந்து தவறிக் கீழே விழும் அளவிற்குத் தொங்கிக்கொண்டிருந்தான். சிறுவன் அழும் சத்தம் கேட்டு, சிறுவனின் பெற்றோர் வெளியே வந்துள்ளனர். அப்போது, வீட்டின் உள்பகுதி வழியாக குழந்தையைக் காப்பாற்ற ஒருவர் முயன்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த கஸாமா என்பவர், தன் உயிரைப் பற்றி யோசிக்காமல், பாதுகாப்பு கவசங்கள் எதையும் அணிந்துகொள்ளாமலே ஸ்பைடர்மேன்போல கட்டடத்தின் ஸ்லாப்களை மட்டும் பிடித்து சரசரவென மேலே ஏறி, அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிறுவனை ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் காப்பாற்றிவிட்டார். கஸாமா சிறுவனைக் காப்பாற்றும் வீடியோ, இணையதளங்களில் வெளியானது.
இதை அறிந்த, பாரிஸ் மேயர் ஆன் ஹிடால்கோ, கஸாமாவைப் பாராட்டினார். இவரைத் தொடர்ந்து, சினிமா கிராஃபிக்ஸ்கூட பக்கத்தில் வரமுடியாத அளவுக்குத் துணிச்சலாக சிறுவனைக் காப்பாற்றிய கஸாமாவை தனிப்பட்ட முறையில் பாராட்ட விரும்பிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், கஸாமாவை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துள்ளார்.
VC – The Guardian






