இலங்கையில் தீவிரமடையும் அனர்த்த நிலைமை! நேரடியாக களத்தில் ஜனாதிபதி

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிக்க ஜனாதிபதி நேற்று மாலை சிலாபம் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது வெள்ள நிலைமை காரணமாக தாழ் இறங்கிய மெதகொட பாலத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்.

அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள நாத்தாண்டிய ஸ்ரீ புஷ்பாராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அங்குள்ள மக்களின் குறைநிறைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

மஹவெவ பிரதேச செயலக அலுவவத்தில், பிரதேச அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை கடந்த எட்டு நாட்களுக்கு மேலாக தொடரும் அடைமழை காரணமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 20 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர் என இடர்காப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.