உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பாதான். உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான்.
தந்தையில் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லாவித பிரச்சனைகளுக்கு மூல காரணம். ஒரு வயது வந்த பெண்ணுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல..ஒரு நல்ல நண்பன், பாதுகாவலன், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை கொடுப்பவர், என பல முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே?
அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதியங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியது அப்பாவின் கடமையாகிறது.
சின்ன வயதில் சிரித்துச் சிணுங்குகையில் அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பது, பென்சில், இரப்பர் என நமக்கு வாங்குவதை அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கி தருவார். மகளும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கன்னத்தில் முத்தம் தருவாள்.
திடீரென் ஒரு நாள் பார்த்தால் சட்டென்று வளர்ந்து நிற்பாள். ”என் டாடி சூப்பர்” என்று சொன்னவள் தற்போது ”டாடிக்கு ஒன்றுமே தெரியாது” என்று கூறுவாள். இவற்றிற்கு எல்லாம் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான். அதற்காக நீங்கள் என பெண்ணிற்கு இனி நான் தேவையில்லை என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனமும் எப்போதும் அவளிடம் இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தும் விதத்தில் தான் மாற்றம் இருக்கும்.
டாடி பிளீஸ் என்ற கேட்டுவாங்கியவள் தற்போது அது வேணும் முடியுமா? முடியாதா? என பிடிவாதம் பிடிப்பாள். ஆனால் தந்தையாகிய நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிபார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அதில் அவளுக்கு ஒரு திருப்தி.
நல்லது என்றால் அப்பா ஒத்துப்பார் என்னும் நிலமைதான் இருக்க வேண்டும் தவிர அவர்கிட்டே என்ன சொன்னாலும் நடக்காது என்ற நிலைக்கு கொண்டு வந்துவீடாதீர்கள். நீங்கள் பேசுவதைவிட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேளுங்கள் அது மிக முக்கியம்.
இந்த வயதில் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும். மேலும் மகளின் தினசரி வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்கள் இருக்கும். ஆனால் அவளுக்கு எதுவானாலும் கவலையில்லை அப்பா இருக்கிறார் என்று உணரச் செய்ய வேண்டும்.
எந்தக் காரணமும் கொண்டு அவளை திட்டாதீர்கள். மேலும் ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள் பற்றியும் அவளுக்குப் புரிய வைப்பது அவசியம். சமூகம் சார்ந்த அறிதல்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்.
பெண்ணின் திருமண வயது வரும்போது அப்பாதான் உலகம் என்னும் நிலைக்கு வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும் பொறுமையான அணுகுமுறையும் நீங்கள் கொடுக்க வேண்டும்.