எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிlட்டால், அவருக்குரிய வேட்பாளர் கட்டுப்பணத்தை தான் கட்டுவதற்கு பொறுப்பேற்பதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தனது வீட்டிற்கு வந்த கோத்தபாய, கண்ணீர் விட்டு அழுததாகவும், பின்னர் ஒருதொகை பணம் கொடுத்து வீட்டிலிருந்து அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கம்பஹாவில் இன்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். கோத்தாபய ராஜபக்ச நாட்டில் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது பலர் பயந்தார்கள்.
வெள்ளை வான் அனுப்பினார், கடத்தினார், குண்டர்களை அனுப்பி தாக்குதல் மேற்கொண்டார், சொத்துகளை கொள்ளையடித்தார், இதனால் மக்கள் அஞ்சினார்கள்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதாயின் அவருக்குரிய வேட்பாளர் கட்டுப்பணத்தை தான் கட்டுவதற்கு தயார்.
இந்தப் பணத்தை கட்டியதன் பிறகு அதனை மறந்துவிட வேண்டும். அதனை அவர் ஒருபோதும் வழங்க மாட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் எனது வீட்டுக்கு வந்த கோத்தபாய அழுதார்.
அதன்போதும் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து அவரை வீட்டியிலிருந்து அனுப்பிக் கொண்டேன். அதேபோன்று, கட்டுப்பணத்தை கொடுத்து அவருக்கு உதவுவதற்கு நான் தயார் எனவும் அமைச்சர் பொன்சேகா மேலும் கூறினார்.






