ரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண!

ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் நாட்டில் ஆட்சியமைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்பதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இனிமேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி நாட்டில் தொடர்வதற்கு மக்கள் தமது ஆணையினை இனியும் வழங்க மாட்டார்கள். அடுத்து ஆட்சிக்கு வருபவர்களை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

19ஆவது அரசியலமைப்பினை இரத்து செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

தேசிய அரசாங்கத்திலிருந்து தற்போது பல உறுப்பினர்கள் கூட்டு எதிரணியினர் பக்கம் இணைந்துள்ளமையானது நல்லாட்சி அரசாங்கத்தின் பாரிய பின்னடைவாகக் காணப்படுகின்றது.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களும் மஹிந்த தரப்பினருடன் இணைந்துள்ளனர். தேசிய அரசாங்கத்தின் பொறுப்பற்ற நிர்வாகத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதாளத்திற்குச் சென்றுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களிடம் வாக்குக் கேட்பதற்கு எந்த அருகதையும் இல்லை. அநியாயமாக பொருட்களின் விலையினை அதிகரித்து மக்களின் வாழ்வாதாரத்தினைச் சிதைத்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.